மீண்டும் 90+ ரன்களில் அவுட்டான டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் 90+ ரன்கள் கடந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். அடுத்தடுத்த டெஸ்ட் இன்னிங்ஸில் வார்னர் சதத்தை மிஸ் செய்துள்ளது அவரது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது.
அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வார்னர், 95 ரன்களை எடுத்து அவுட்டாகி உள்ளார். 167 பந்துகளை எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் வார்னர் அவுட்டாகி வெளியேறினார்.
முன்னதாக இதே தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் 176 பந்துகளில் 94 ரன்களை குவித்து அவுட்டாகி இருந்தார். தனது 160 மற்றும் 161 என இரண்டு இன்னிங்ஸிலும் வார்னர் 90+ ரன்களை கடந்து அவுட்டாகி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்னதாக வார்னர் விளையாடி உள்ள 159 இன்னிங்ஸில் ஒருமுறை மட்டுமே 90+ ரன்கள் கடந்து அவுட்டாகி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011 முதல் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7500 ரன்களை சேர்த்துள்ளார் அவர். இதில் 32 அரை சதங்களும் மற்றும் 24 சதங்களும் அடங்கும்.