பிட்ச் பற்றி மூச்சு விடக் கூடாது: கிரிக்கெட் கவுன்சில் அதிரடி உத்தரவு
புனே சம்பவத்தை அடுத்து கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகள தன்மை குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று பராமரிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தபின், 3 ஒரு நாள் போட்டிகளில் அடுத்து விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை நடக்கிறது. இந்நிலையில் பிட்ச்சின் தன்மை குறித்து பத்திரிகையாளர், அங்குள்ள பிட்ச் பரமாரிப்பாளரிடம் விசாரித்தனர். அதுபற்று எதுவும் தகவல் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்தது. அப்போது இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக பிட்சின் தன்மையை மாற்றி அமைக்கப் போவதாக, அதன் பராமரிப்பாளர் பாண்டுரங் சல்கோன்கர் கூறிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிட்ச் பரமாரிப்பின்போது வேறு யாருக்கும் உடன் இருக்க அனுமதி இல்லை. ஆனால் தாங்கள் அனுமதிக்கிறோம் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக பிட்சின் தன்மைபற்றி யாரிடமும் வாயை திறக்கக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பிட்ச் பராமரிப்பாளர் மைதானத்துக்குள் செல்லும்போது செல்போன்களை கொடுத்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகவலை இமாச்சலப்பிரதேச கிரிக்கெட் அசோஷியேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.