தொடர்ச்சியாக தாக்கிய சிராஜ்! டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வார்னர்! என்ன நடந்தது?

தொடர்ச்சியாக தாக்கிய சிராஜ்! டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வார்னர்! என்ன நடந்தது?
தொடர்ச்சியாக தாக்கிய சிராஜ்! டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வார்னர்! என்ன நடந்தது?

முகமது சிராஜ் வீசிய பவுன்சரில் நிலைகுலைந்த வார்னர், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடு வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 3ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹசல்வுட் முதலிய வீரர்கள் விலகியுள்ளனர். மேலும் ஓபனிங் பேட்டரான டேவிட் வார்னரும் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சிராஜ் வீசிய பவுன்சரால், முழங்கையில் ஏற்பட்ட காயம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய போது, 8ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ், ஷார்ப்பான பவுன்சர்களால் டேவிட் வார்னரை நிலைகுலையச் செய்தார். அவர் வீசிய 6 பந்துகளில் 4 பந்துகளை பவுன்சராக வீசிய சிராஜ், ஒரு பந்தை டேவிட் வார்னரின் முழங்கையில் அடித்தார். அதில் நிலைகுலைந்த வார்னர் தலைகுணிந்தபடி உதவியாளர்களை அழைத்தார். அந்த ஓவரை முடித்துவிட்டு பின்னர் அடுத்த ஓவரை வீச வந்த முகமது சிராஜ், இந்த முறை ஷார்ப்பான பவுன்சரால் வார்னர் முகத்தின் ஹெல்மெட்டை தாக்க, இப்போது தலையை ஆட்டியபடி நிலை தடுமாறிய வார்னர், சிறிது நேரம் கழித்து தான் அடுத்த பந்தை சந்தித்தார். பிறகு பேட்டிங் செய்த வார்னர், முகமது ஷமி வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்னில் வெளியேறினார்.

3ஆவது டெஸ்ட்டுக்கு காத்திருந்த வார்னர்! பின் வலி அதிகமானதால் விலகல்!

முழங்கையில் ஏற்பட்ட காயம் லேசான காயமாகவே இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இருந்தபோதும் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் பேட்டிங் செய்யாமல், டிரவிஸ் ஹெட் ஓபனிங் செய்து விளையாடினார். இந்நிலையில் 3ஆவது டெஸ்ட்டில் தான் வார்னர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வார்னரும் 3ஆவது போட்டியில் விளையாடுவதற்காக அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபட்டார். ஆனால் அடுத்து எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, வலி அதிகமாக இருந்ததாலும், காயம் ஆழமானதாக இருந்ததாலும் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகி, டேவிட் வார்னர் குடும்பத்துடன் சிட்னிக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தொடரிலிருந்தே விலகலா? மாற்று வீரர் யார்?

டேவிட் வார்னர் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 17ஆம் தேதி தான் தொடங்கவிருப்பதால், டேவிட் வார்னர் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னருக்கு மாற்றாக டிரவிஸ் ஹெட் ஓபனிங் செய்த நிலையில், ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் கூறுகையில், “இந்தியா போன்ற ஆடுகளங்களில் ஹெட் ஓபனிங் செய்யக்கூடியவர்தான் என்றாலும், அவர் ஒரு முழு ஓபனர் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும் கேம்ரின் க்ரீன் ஓபனிங் செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

பேட் கம்மின்ஸ் எப்போது திரும்புவார்?

கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையென்றால் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com