“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை
பயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தோனி கேப்டனாக இருந்த போது தெரிவித்ததாக முன்னாள் பயிற்சி ஆலோசகர் பேடி அப்டோன் கூறியுள்ளார்.
பேடி அப்டோன் 2008ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பில் இருந்த போது தான் இந்திய அணி 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது. அதேபோல், இந்திய அணியின் சர்வதேச தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி முதலிடம் பிடித்தது.
இந்நிலையில், தோனி கேப்டனாக இருந்த போது ஓய்வு அறை விவாதம் மற்றும் பயிற்சியின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றுவார் என்று பேடி அப்டோன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் போது, அனில் கும்ளே டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்தார். தோனி ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்தார். நாங்கள் அணியை வழிநடத்த பல்வேறு விஷயங்களை கடைபிடித்தோம். பயிற்சி மற்றும் ஆலோசனையின் போது வீரர்கள் அனைவரும் நேரத்திற்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
அந்த நேரத்தில், பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு கும்ளே ரூ10 ஆயிரம் அபராதம் விதித்தார். ஆனால், ஒரு வீரர் பயிற்சிக்கு தாமதமாக வந்தாலும், அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ10 ஆயிரம் அபராதம் விதியுங்கள் எனத் தோனி ஆலோசனை தெரிவித்தார். தோனி அப்படி கூறிய பின்னர், ஒருவரும் தாமதமாக வரவில்லை” என்றார்.