“இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரை மாற்றுங்கள்” - கங்குலி
கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக சொதப்பி வரும் நிலையில் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை முயற்சிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அத்துடன் நடுகள ஆட்டக்காரர்கள் ரஹானே மற்றும் விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. இதற்கு தான் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் ஷர்மாவை களமிறக்கவேண்டும் என்று முன்பே கூறியிருந்தேன். அவர் ஒரு சிறப்பான வீரர். அவர் அணியில் விளையாடாமல் இருப்பது அணிக்கு அவ்வளவு நல்லது இல்லை.
உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு அவர் டெஸ்ட் தொடரிலும் முத்திரை பதிக்க காத்திருக்கிறார். மேலும் நடுகள வரிசையில் ரஹானே மற்றும் விஹாரி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆகவே ரோகித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும். ஏனென்றால் தற்போது உள்ள மாயங்க் அகர்வால் ஒரு சில நேரங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். எனினும் கே.எல். ராகுல் சொதப்பி வருகிறார். எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்தில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.