ஜெய்ப்பூர் போலீசாரைத் தொடர்ந்து பாகிஸ்தான் போலீசாரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைக் காலாய்த்து போக்குவரத்து விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஃபைசலாபாத் நகர போக்குவரத்து காவல் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த விழிப்புணர்வுப் புகைப்படத்தில், கோட்டைத் தாண்டாதீர்கள்; அதற்கு எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் போக்குவரத்து காவல்துறை பயன்படுத்திய அதே வார்த்தைகளுடன் போக்குவரத்து விழிப்புணர்வு புகைப்படத்தினை பாகிஸ்தானின் ஃபைசலாபாத் காவல்துறையும் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பும்ரா வீசிய நோபாலில் அவுட் கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஃபகர் ஜமன், சதமடித்தார். பும்ரா வீசிய நோபாலே இந்தியா அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக விமர்சிக்கப்பட்ட சூழலில், ஜெய்ப்பூர் போலீசாரின் விளம்பரம் வெளியானது. இந்திய அணியின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடிய, தன்னுடைய உணர்வுகளை இந்த விளம்பரம் காயப்படுத்திவிட்டதாக ஜெய்ப்பூர் போலீசாருக்கு பும்ரா பதிலளித்திருந்தார். இதையடுத்து பும்ராவிடம் ஜெய்ப்பூர் போலீசார் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.