விராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் வங்கதேச அணி நூலிழையில் வெற்றியை இழந்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 120 ரன்களுக்கு விக்கெட் விழாமல் வலிமையாக இருந்தது. லிடன் தாஸ் சதம் விளாசினாலும், மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 222 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர், பேட்டிங் செய்த இந்திய அணி போராடி கடைசி பந்தில்தான் வெற்றி பெற முடிந்தது.
இந்தப் போட்டியில், மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு ஸ்டம்பிங் செய்தார். அதில், 41வது ஓவரின் கடைசி பந்தில் லிடன் தாஸை தோனி செய்த ஸ்டம்பிங் ரசிகர்கள்களை வியக்க வைத்துவிட்டது. சதம் விளாசி இந்திய அணி நெருக்கடி கொடுத்து கொண்டு இருந்தவர் லிடன். கடைசி வரை அவர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வங்கதேசம் 250 ரன்களை கடந்து இருக்கும். ஆனால், லிடன் அசந்த நேரத்தில் தோனி ஸ்டம்பிங் செய்துவிட்டார். நூலிழையில் அவுட் ஆனார் லிடன். மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டுதான் அவுட் என்பதை அறிவித்தார். அதாவது கிரிஸில் கால் இருந்ததை உறுதி செய்ய முடியாததால் அது அம்பயரின் முடிவுக்கு விடப்பட்டது. அதனால், அம்பயர் அவுட் எனத் தெரிவித்தார்.
தோனி 0.16 செகண்ட் வேகத்தில் ஸ்டம்பிங் செய்ததை, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வழக்கம் போல் புகழ்ந்து தள்ளினர். ஸ்டம்பிங் செய்யப்பட்ட படத்தை பலரும் பதிவிட்டனர். ஆனால், மற்றொரு புறம் லிடன் அவுட் ஆகவில்லை எனப் படங்களை பதவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இறுதிப் போட்டி முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில், இந்திய அணியின் மீது கோபத்தில் இருந்த வங்கதேச ரசிகர்கள் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை நேற்று ஹேக் செய்துள்ளனர். இத்தனைக்கும் ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தான் கேப்டன். விராட் கோலி விளையாடவே இல்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவரது இணையதளத்தை முடக்கியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்பது இந்திய கிரிக்கெட் கவுன்சிலாக செயல்படுகிறது என வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசி தள்ளினர்.
“டியர் ஐசிசி, கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டாக இல்லை. எல்லா அணிக்கும் சம உரிமை இல்லையா? விளக்குங்கள். அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும், அம்பயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு முறையும் நீங்கள் இணையதளத்தை சரிசெய்த அடுத்த நொடியே நாங்கள் ஹேக் செய்வோம். இந்திய சகோதர, சகோதரிகளே, உங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? விளையாட்டில் ஒவ்வொரு அணியும் சம்மாகவே நடத்தப்பட வேண்டும்” என்று ஹேக் செய்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பயரின் முடிவால் ஐசிசிக்கு எதிராக வங்கதேச ரசிகர்கள் கடுப்பாவது இதுதான் முதன்முறை. 2015 உலகக் கோப்பையின் போது ரோகித் சர்மா ஷாட் பந்தை அடித்து கேட்ச் ஆனது. ஆனால் அதற்கு அம்பயர் நோ பால் கொடுத்தார். அந்தப் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். மெல்போனில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்திய அணிவெற்றி பெற்று வங்கதேசத்தை காலிறுதியில் இருந்து வெளியேற்றியது.