சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா ! ஆஸியை கலாய்க்கும் மீம்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 5க்கு 0 என்ற கணக்கில் இழந்து பரிதாபத்துக்குறிய பாம்ப்பம்பட்டி அணி போல் சோகத்தில் இருக்கிறது. ஐந்து உலகக் கோப்பையை வென்ற அணி, இப்போது ஐ.சி.யூவில் அட்மிட் செய்யும் நிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் இருக்க, மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களோ இந்தத் தோல்வியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அதுவும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸியின் தோல்வியை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள். சரி, இந்திய ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம் ? ஆஸியின் வரலாறு அப்படி. ஆஸி அணி பொதுவாக ஆக்ரோஷம் என்ற பெயரில் எதிரணி வீரர்களை மோசமாக திட்டுவது, இன வெறியை தூண்டும் பேச்சு, அழுகுணி ஆட்டங்கள், திமிரான நடவடிக்கைகள் என 'பல்வேறு' திறமைகளுக்கு சொந்தக்காரர்கள்.
ஆஸி வீரர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளில் மோசமாக பாதிப்படைந்தது இந்தியாவும், இங்கிலாந்தும். ஆஸியின் மோசமான நடத்தைகளுக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் கோலி வரை பலிகடாவாகியுள்ளனர். முன்பெல்லாம் எதிர் அணியினரை கேலி கிண்டல்கள் செய்த ஆஸி வீரர்கள், இப்போது பிற நாட்டு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கேலிக்கும், ஏளனப் பார்வைக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.
கிரிக்கெட் என்பது ஜென்டில் மேன் விளையாட்டு அதன் பிம்பத்தை நொறுக்கிய ஆஸி, இப்போது தான் விளைத்ததை தானே அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறது. இப்படிதான் நம் தாத்தா காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருந்தது, இப்போது அந்த அணியின் நிலை எப்படி இருக்கிறது என்று சொல்லி தெரிய தேவையில்லை.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தும் வார்னருக்கும் தடை விதித்ததில் இருந்தே, ஆஸியின் இமேஜ் டாமேஜ் ஆனது. அதன் நீட்சியாகவே நெட்டிசன்கள் ஆஸியின் இந்தத் தோல்வியை பார்க்கின்றனர்.
குருவி தலையில் பனங்காய் போல டிம் பெயினுக்கு கேப்டன் பதவியை வழங்கியது ஆஸி கிரிக்கெட் வாரியம். ஓராண்டு தடை முடிந்து ஸ்மித்தும், வார்னரும் அணிக்கு திரும்பும்போது ஆஸியின் நிலை எப்படி இருக்கும் என்று யோசிக்கவே பரிதாபமாக உள்ளது.