டி20 போட்டியில் 42 பந்துகளில் சதமடித்து பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிதி சாதனை படைத்தார்.
இங்கிலாந்தில் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான நாட்வெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஹாம்ப்ஷைர்-டெர்பிஷைர் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹாம்ப்ஷைர் அணியில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிதி 42 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அடுத்த பந்தில் அவர் அவுட்டானார். அவரது சதத்தில் 10 பவுண்டரியும், 7 சிக்சர்களும் அடங்கும்.
அப்ரிதி, 20 ஓவர் போட்டியில் அடித்த முதல் சதம் இது. இதன் மூலம் ஹாம்ப்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெர்பிஷைர் அணி 148 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 200 சிக்சர் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் அப்ரிதி.