“ரஷித் சுழலில் சுருண்ட பங்களாதேஷ்” - 224 ரன் வித்தியாசத்தில் ஆப்கான் அபார வெற்றி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்று, ஒரு டெஸ்ட் மற்றும் முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 345 ரன்கள் சேர்த்து இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா 102, அஸ்கார் ஆப்கன் 92, ரஷித் கான் 51 ரன்கள் குவித்தனர்.
இதனையடுத்து, பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. அந்த அணியில் ஷகிப் அல் ஹாசன் மற்றும் முஸ்பிகூர் ரஹிம் ஆகிய முன்னணி வீரர்கள் சொதப்பினர். எனவே பங்களாதேஷ் அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹக்யு 52, மொசாதக் ஹோசேன் 48 ரன்கள் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட் சாய்த்தார். நபி 3 விக்கெட் எடுத்தார்.
இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆப்கான் அணி 260 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்ரஹிம் ஜத்ரான் 87, அஸ்கர் அப்கான் 50 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹாசன் 3 விக்கெட் சாய்த்தார். மெஹிடி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹாசன் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
இதனையடுத்து, 398 என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியில் ஷட்மன் இஸ்லாம் 41, ஷகிப் அல் ஹாசன் 44 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அதனால், பங்களாதேஷ் அணி 173 ரன்னில் ஆட்டமிழந்தது. ஆப்கான் அணி சார்பில் ரஷித் கான் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட் சாய்த்தார். ஜாகிர் கான் 3 விக்கெட் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தான் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. முதல் இன்னிங்சில் 5, இரண்டாவது இன்னிங்சில் 6 என மொத்தம் 11 விக்கெட் சாய்த்த ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை ரஷித் பதிவு செய்துள்ளார்.