வலுவான நிலையில் ஆப்கான் - பங்களாதேஷை வீழ்த்துமா ?
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்று, ஒரு டெஸ்ட் மற்றும் முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 345 ரன்கள் சேர்த்து இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா 102, அஸ்கார் ஆப்கன் 92, ரஷித் கான் 51 ரன்கள் குவித்தனர்.
இதனையடுத்து, பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. அந்த அணியில் ஷகிப் அல் ஹாசன் மற்றும் முஸ்பிகூர் ரஹிம் ஆகிய முன்னணி வீரர்கள் சொதப்பினர். எனவே பங்களாதேஷ் அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹக்யு 52, மொசாதக் ஹோசேன் 48 ரன்கள் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட் சாய்த்தார். நபி 3 விக்கெட் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சட்ரான் 87 ரன்கள் எடுத்தார். ஆஸ்கர் ஆப்கன் அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய ரஷித் கான் 22 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். மூன்றாம் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்துள்ளது. ஆஃப்சர் சாசை 34 ரன்களுடனும், அஹமத்சை ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி 374 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.