ஆப்கான் மீண்டும் தோல்வி: வெற்றியுடன் விடைபெற்றது வெஸ்ட் இண்டீஸ்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 42 வது லீக் போட்டியில், அரையிறுதியில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல், 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷாய் ஹோப், மற்றொரு தொடக்க வீரர் லூயிஸ் உடன் இணைந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதி ஓவர்களில் இளம் வீரர் பூரன் மற்றும் கேப்டன் ஹோல்டர் கூட்டணி ஆப்கன் பவுலர்களை பந்தாடினர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஹோப் 77 ரன்களும் பூரன் 58 ரன்களும் எடுத்தனர்.
312 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது. தொடக்க வீர ரான குல்புதின் நைப் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர் இக்ரம் அலி மற்றும் ரஹ்மத் ஷா ஜோடி சீராக ரன்களைக் சேர்த்தது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இக்ரம் அலி 86 ரன்களிலும், ரஹ்மத் ஷா 62 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
நடு வரிசை வீரர்கள் நிலைத்து நின்று விளையாட தவறியதால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 77 ரன்களைக் குவித்த மேற்கிந்திய வீரர் ஷாய் ஹோப் ஆட்டநாயக னாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளி யேறியது ஆப்கானிஸ்தான் அணி.