வாக்கர் யூனிஸ் சாதனையை முறியடித்த ஆப்கான் சுழல்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாக்கர் யூனுஸ் சாதனையை ஆப்கானிஸ்தானின் இளம் சுழல் பந்துவீச்சாளர் முறியடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் இளம் வயதில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜட்ரான், பாகிஸ்தான் வேகப்புயல் வக்கார் யூனிஸ் சாதனையை முறியடித்து அசத்தினார்.
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் எர்வின் 54 ரன்களும் டெய்லர் 30 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கான் தரப்பில் இளம் சுழல்பந்துவீச்சாளர் முஜீப் ஜட்ரான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். இளம் வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாக்கர் யூனுஸ் படைத்திருந்தார். அவர் அந்தச் சாதனையை நிகழ்த்திய போது, வயது 18. ஆனால், முஜிப் 16 வயதிலேயே இந்தச் சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய ஆப்கான் அணி, விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது ஆப்கான்.
இதுபற்றி முஜீப் கூறும்போது, ‘கேப்டனும் மூத்த வீரர்களும் நம்பிக்கை அளித்தார்கள். அதனால் என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது. வருங்காலத்தில் ஆப்கானிஸ்தானில் சிறந்த சுழப்பந்துவீச்சாளர் என்ற பெயரை வாங்க வேண்டும் என்பது என் ஆசை’ என்றார் முஜீப்.
இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.