அதானி குழுமம் வாங்கிய அகமதாபாத் அணியில் ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு முக்கியத்துவம்!

அதானி குழுமம் வாங்கிய அகமதாபாத் அணியில் ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு முக்கியத்துவம்!
அதானி குழுமம் வாங்கிய அகமதாபாத் அணியில் ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு முக்கியத்துவம்!

அதானி குழுமம் ஏலம் எடுத்த மகளிர் ஐபிஎல் அணிகளில் ஒன்றான அகமதாபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் (மகளிர் ஐபிஎல்)

இந்தியாவில் மிகப் பிரபலமான கிரிக்கெட் திருவிழாவாகக் கருதப்படும் ஆடவர் ஐபிஎல்லைப் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கும் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தற்போது வேகம் பிடித்து வருகின்றன. இந்த ஐபிஎல் சீசனில் 5 (அகமதாபாத், லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு) மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த அணிகளை ஏலம் எடுக்கும் நிகழ்வு கடந்த மாதம் நடைபெற்றது.

அதானி குழுமம் வாங்கிய அகமதாபாத் அணி

இதில் அகமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமமும், மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியைரூ.901 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனமும், டெல்லிஅணியை ரூ.810 கோடிக்கு ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனமும் வாங்கியுள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் 13ம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த 1,000 வீராங்கனைகள் பதிவு செய்துள்ள நிலையில், ஒரு அணிக்கு 18 பேர் என மொத்தமே 90 வீரர்கள்தான் ஏலத்தில் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை

இந்த நிலையில், அகமதாபாத் அணியின் (குஜராத் ஜெயண்ட்ஸ்) ஆலோசகராக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த அணி தங்களது அணியின் பயிற்சியாளர் குழுவையும் அறிவித்துள்ளது. அதன்படி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நூஷின் அல் கதீர், பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஆல்ரவுண்டர்கள் துஷார் அரோத்தே மற்றும் கவன் ட்வினிங் ஆகியோர் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரேச்சல் ஹெய்ன்ஸுக்கு முன்னுரிமை ஏன்?

ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலை மேற்கொண்டு வருவதால்தான் அதானி குழுமம், அந்நாட்டு வீராங்கனைக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும், தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பல வீராங்கனைகள் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற பேச்சும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com