ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா: அவரது மனைவிக்கும் தொற்று உறுதி

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா: அவரது மனைவிக்கும் தொற்று உறுதி

ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா: அவரது மனைவிக்கும் தொற்று உறுதி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகளவில் உள்ளது. இந்த கொரோனா பாதிப்புக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட யாரும் தப்பிப்பது இல்லை. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று எனக்கு உறுதியாகியுள்ளது. தேவையான கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னை நேரில் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஹர்பஜன் சிங்கின் மனைவியும் முன்னாள் பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், விரைவில் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தனர். கொரோனா உறுதியானதை அடுத்து ஹர்பஜன் சிங்கிற்கு விளையாட்டு வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் வரிசையில் 4-வது இடத்தைப் பிடித்திருந்தார். கடந்த மாதம் அனைத்துவடிவ கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com