ஐபிஎல் சூதாட்டத்தை ஒத்துக்கொண்டாரா சல்மான் கான் சகோதரர்?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் ஒத்துக்கொண்டுள்ளார். சூதாட்டம் மூலம் 2 கோடியே 75 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாக மும்பை காவல்துறையிடம் அர்பாஸ் கான் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
10-ஆவது ஐபிஎல் தொடரின்போது நடந்த சூதாட்டப் புகார் தொடர்பாக, சூதாட்ட கும்பலின் முக்கிய நபரான சோனு ஜலான் என்பவரை மும்பை காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்காக நேரில் ஆஜராக மும்பை காவல்துறை அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்பேரில் இன்று காலை அர்பாஸ் கான் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் சூதாட்டம் மூலம் 2 கோடியே 75 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாக காவல்துறையினரிடம் அர்பாஸ் கான் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.