"இந்தியா ஒருநாள் F1 சாம்பியன் ஆகும்!" ~ அஜித் நம்பிக்கை..!
இந்தியா ஒருநாள் F1 உலக சாம்பியனை வெல்லும் என்றும், அதற்கு சில விசயங்களை செய்ய வேண்டும் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார், தனது சிறு வயது முதலே கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இடையே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் இருந்து வந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, அதில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார் ரேஸிங் அணி இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்தது.
இதனைத்தொடர்ந்து அஜித்குமார் ரேஸிங் அணி ஐரோப்பியன் 24H கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ள நிலையில், தற்போது சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுவருகிறது.
இந்தியா ஒருநாள் F1 உலக சாம்பியனை வெல்லும்..
சமீபத்தில் பேசியிருக்கும் அஜித்குமாரின் வீடியோவை, அஜித்குமார் ரேஸிங் அணி எக்ஸ்தளத்தில் பதிவுசெய்துள்ளது.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், “நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸை ரொம்ப சுலபமானதுனு நினைக்கிறாங்க. எனக்காக அல்ல, மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கணும், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கணும். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இது எவ்வளவு கடினமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்க. நம்மகிட்ட நிறைய இந்திய டிரைவர்கள் இருக்காங்க, அவர்களை ஊக்கப்படுத்தினால் ஒரு நாள் இந்தியா F1 உலக சாம்பியனை வெல்லும்” என்று அஜித்குமார் பேசியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஆண்டில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களை வெளியிட்ட நடிகர் அஜித்குமார், தற்போது நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அடுத்த படத்திற்கான வேலைக்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.