ஒலிம்பிக் போட்டியின்போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன்: அபினவ் பிந்த்ரா
இந்தியாவின் புகழ் பெற்ற துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக் போட்டிகளின் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அபினவ் பிந்த்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வானார். ஆனால் இறுதிச் சுற்றில் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
தற்போது, ரியோ போட்டியின் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ள பிந்த்ரா, “நான் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டதற்கு என் திறன் அந்த நேரத்தில் போதுமான இல்லை என்பதே காரணம். என் கை நடுங்கியதாலோ, வலிப்பால் பாதிக்கப்பட்டதாலோ இல்லை” என்றார். 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தான் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றவர் இவர். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் அபினவ் என்பது குறிப்பிடத்தக்கது.