கோச் கிட்ட கோபிக்கக் கூடாது: கோலிக்கு அபிநவ் மறைமுக அறிவுரை
கும்ப்ளே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ்பிந்த்ரா ட்விட்டரில் மறைமுகமாக ஒரு அறிவுரை ஒன்றைக் கூறியுள்ளார்.
அபிநவ் பிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கோச்சைப் பற்றிக் கூறியிருக்கிறார். “எனது பயிற்சியாளர் எனக்கு மிகச்சிறந்த ஆசிரியராக இருந்துள்ளார். நான் அவரை வெறுத்திருக்கிறேன். ஆனால் 20 ஆண்டுகள் அவரோடுதான் ஒட்டிக் கொண்டிருந்தேன். நான் கேட்கவே விரும்பாதவற்றை அவர் கூறிக் கொண்டே இருந்தார்” என்று கூறியுள்ளார். அபிநவ் நேரடியாக விராட் கோலி பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரைத்தான் மறைமுகமாகச் சொல்கிறார் என்கிறார்கள் விளையாட்டுப் பிரியர்கள்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பணியை ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி கும்ப்ளே கூறியபோது, கேப்டன் விராட் கோலியுடன் தனக்கு ஒத்துப் போகவில்லை எனவும், அவர் என்னுடைய அறிவுரையை ஏற்பதைக் காட்டிலும் தனக்கான ஒரு ஸ்டைலில் இயங்க விரும்புகிறார் என்றும் கூறியிருந்தார். கும்ப்ளே இப்படிச் சொன்னதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.