ஓய்வு பெற்றது ஏன்? டி வில்லியர்ஸ் விளக்கம் : ரசிகர்கள் உருக்கம்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவது ஏன்? என டி வில்லியர்ஸ் விளக்கமளித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேசியுள்ள டி வில்லியர்ஸ், ““நான் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். 114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒரு நாள் போட்டிகள், 78 டி20 போட்டிகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்தவர்களுக்கு வழிவிடும் நேரம் இது. நான் எனது விருப்படியே முடிவெடுத்துள்ளேன். நேர்மையான முடிவும் இது. நான் களைத்துவிட்டேன். இது ஒரு கடினமான முடிவு தான். நீண்ட நேர யோசனைக்குப் பிறகுதான் இந்தக் கடின முடிவை எடுத்தேன். நான் நல்ல நிலையில் விளையாடும் கிரிக்கெட்டராக இருக்கும் போதே ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி பெற்றிருக்கும் சரியா நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “என்னை அணிக்கு தேர்வு செய்த தென்னாப்ரிக்க மூத்த வீரர்களுக்கு நன்றி. அவர்கள் என்னை அணிக்கு தேர்வு செய்யவில்லை என்றால், இது எதுவும் இல்லை. எனக்கு சிறந்த பயிற்சியாளர்கள், சக கிரிக்கெட் வீரர்கள் கிடைத்தனர். இத்தனை வருடங்கள் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். செல்வதற்கு இது சரியான நேரம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. தென்னாப்ரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு நன்றி. இதற்கு மேலும் கிரிக்கெட் விளையாடும் எண்ணம் இல்லை. இதன் பிறகு நான் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என வேண்டுமானால் நம்புகிறேன். இதன்பிறகு நான் டூபிளசிஸ் மற்றும் தென்னாப்ரிக்க அணியின் சிறந்த ஆதரவாளராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்க அணியில் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் சிறந்த வீரர்களுள் ஒருவர் ஏபி டி வில்லியர்ஸ். இவரை ரசிகர்கள் புனைப்பெயராக மிஸ்டர் 360 என்று அழைப்பார்கள். அது ஏன் எனில், 360 டிகிரி கோணங்களில் பந்தை சிதறடிப்பார் என்பதால்தான். இவர் ஆடும் போதும் பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என குழம்பிப் போவார்கள். ஏனெனில் வலது பேட்டை பிடித்துக்கொண்டு நிற்கும் வில்லியர்ஸ், பந்துவீச்சாளர் ஓடி வந்துகொண்டிருக்கும் போது திடீரென இடது, வலது என மாறி மாறி திரும்புவார். அப்போது எந்தத் திசையில் பந்து வருகிறதோ, அதே திசையில் பந்தை அடித்து பறக்கவிடுவார்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்ரிக்க அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் அறிமுகமானர் டி வில்லியர்ஸ். 17ஆம் தேதி அறிமுகமான இவரது, ஜெர்ஸி எண்ணும் 17 தான். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் கூட இவரது ஆட்டத்தில் அதிரடி குறையவில்லை. கிரிக்கெட் உலகில் சச்சின், கங்குலி, தோனி, லாரா, ஜெயசூர்யா, கில்கிரிஸ்ட் ஆகியோருக்கு எப்படி தனி ரசிகர் கூட்டம் உள்ளதோ, அதேபோன்று டி வில்லியர்ஸ்-க்கும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.