‘தாஜ்மஹாலில் காதலை சொன்ன மிஸ்டர் 360’: ஏபிடி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்..!
தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரது பெயரைச் சொல்லுங்கள் என கிரிக்கெட் ரசிகர் யாரேனும் ஒருவரிடம் கூறினால், உடனே அவர்கள் உச்சரிக்கும் பெயர் ஏபி டி வில்லியர்ஸ் ஆகத்தான் இருக்கும். இவர் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு விளையாடாமல் இருந்தாலும், ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். ரசிகர்கள் மிஸ்டர் 360 டிகிரி என இவரை அழைக்கின்றனர். அதற்குக் காரணம் எத்தகைய சிறந்த பந்துவீச்சாளரின் பந்தாக இருந்தாலும் 360 டிகிரி கோணத்திலும் அதனை விளாசிவிடுவார் என்பதால் தான்.
இவருக்குத் தென்னாப்பிரிக்காவில் மட்டுமின்றி இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இதையெல்லாம் தற்போது குறிப்பிடுவதற்குக் காரணம் இன்று டி வில்லியர்ஸின் 36வது பிறந்த தினம் ஆகும். இந்த தினத்தில் அவர் குறித்த சில சுவாரஸ்ய உண்மைகளைக் காணலாம்.
ஏபி டி வில்லியர்ஸும், தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டு பிளஸிஸும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் பள்ளி அணிக்காக 15 வயதில் இணைந்து விளையாடியுள்ளனர்.
டி வில்லியர்ஸ் ஒரு பாடகரும் ஆவர். இவர் தென்னாப்ரிக்காவில் ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார்.
இவரது பிறந்த தினம் பிப்ரவரி 17 ஆகும். தான் பிறந்த தேதியை ராசியான எண் என நினைத்துக் கொண்டிருக்கும் டி வில்லியர்ஸ், அதையே தனது ஜெர்ஸி எண்ணாகவும் வைத்திருந்தார்.
இவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரர் என்பதை ஒருமுறை அவரே தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
டி வில்லியர்ஸ் கடந்த 2013ஆம் ஆண்டு டேனியலி என்ற பெண்ணை மணந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் டி வில்லியர்ஸ் திருமணத்திற்கு முன்பு தனது காதலை டேனியலியிடம் தாஜ் மஹாலின் முன்பு வைத்து கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிக்கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இவரது பெயரில் உள்ள ஏபி என்பதற்கு விளக்கம் ஆப்ரஹாம் பெஞ்ஜமின் என்பதாகும். இது இவரது தந்தையின் பெயரிலும் இருந்தது. தற்போது டி வில்லியர்ஸின் மகனின் பெயரிலும் ஏபி என்ற எழுத்து இனிஷியலாக இருக்கிறது.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த டி வில்லியர்ஸ், ஒருநாள் போட்டிகளில் செய்த அதிரடி பேட்டிங் சாதனைகளை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை. அதன்படி, ஒருநாள் போட்டிகளில் வேகமான 50 ரன்கள் (16 பந்துகள்), வேகமான சதம் [100 (31)], வேகமான 150 (64 பந்துகள்) என அனைத்தும் டி வில்லியர்ஸ் வசமே உள்ளன. அத்துடன் தென்னாப்பிரிக்க அணியில் வேகமான டெஸ்ட் மற்றும் டி20 சதம் அடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
2004ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன டி வில்லியர்ஸ் 2008ஆம் ஆண்டு வரை ஒருமுறை கூட ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனதில்லை. 78 போட்டிகளில் விளையாடிய பின்னர், முதல் முறையாக 79 போட்டியில் டக் அவுட் ஆனார். இது ஒரு உலக சாதனை ஆகும்.