பீலே, மரடோனா அருகில் அமைக்கப்படும் மெஸ்ஸியின் சிலை! - யாரால், எங்கு தெரியுமா?

பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை CONMEBOL வழங்கியுள்ளது.
பீலே, மரடோனா அருகில் அமைக்கப்படும் மெஸ்ஸியின் சிலை! - யாரால், எங்கு தெரியுமா?

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.

நடந்துமுடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா 36 வருடங்கள் கழித்து வென்றதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு கொண்டாட்டங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் முக்கிய பங்கு, அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உண்டு என சொல்லலாம். ஏனெனில் அவர்தான் அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் பெனால்டி கிக் வரை சென்று, கடைசிக் கட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது அர்ஜெண்டினா அணி.

36 வருட கோப்பை கனவிற்கான காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த லியோனல் மெஸ்ஸிக்கு, 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையின் சிறந்த வீரர் என்ற விருதும், தங்கப்பந்து விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் கோப்பையை வென்றுவிட்டு நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு கொண்டாட்டத்திற்கான உச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் கோப்பையை வென்றதற்கான கொண்டாட்டங்கள் முடிவுபெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் CONMEBOL என சுருக்கமாக அழைக்கப்படும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆனது, 35 வயதான மெஸ்ஸிக்கு அவரது சிலை, தலைமைக்கான கோல், கோப்பைக்கான பிரதி மற்றும் கமாண்ட் ஆஃப் புட்பால் போன்றவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் CONMEBOL அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வீரர்களான பீலே மற்றும் டியாகோ மரடோனாவின் சிலைகளுடன் இணைந்து மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று கூறி உயர்ந்தபட்ச கவுரத்தை மெஸ்ஸிக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பையை வென்றதற்கு மட்டுமில்லாமல், இத்தாலியை வீழ்த்தி அர்ஜென்டினா வென்ற ஃபைனலிசிமா கோப்பைக்கான கவுரமும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியினர் மற்றும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அனைவரும், 2021 கோபா அமெரிக்கா டிரோபி முதலிய மினியேச்சர் கோப்பைகளை வென்றதற்கான பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி பேசும் போது, “நாங்கள் மிகவும் ஸ்பெஷலான, அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அன்பைப் பெறுகிறோம்” என்று உணர்ச்சிபெருக்கில் கூறினார். மேலும், “இது தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம்” என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முடிவில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெற்று விளையாடும் கோபா லிபர்டடோர்ஸ் தொடரின் நேரம், அட்டவணை அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com