ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்து வீச்சாளர்கள்: அஸ்வின், ஜடேஜாவுக்கு என்னதான் ஆச்சு?
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புஜாரா மட்டும் நிலைத்து நின்று 52 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து ஆடியது. அந்த அணியின் மேத்யூஸ் (52), திரிமன்னே (51) ஆகியோர் அரை சதம் எடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர் ஹெராத் 67 ரன்கள் குவித்து அவுட் ஆக, இலங்கை அணியின் ஸ்கோர் 294 ரன்னாக உயர்ந்தது. இந்திய அணியை விட 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இலங்கை.
இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷமி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டை எடுத்தார். அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே எடுப்பது மிகவும் அரிதான விஷயம். இதற்கு முன்பு 1983-ம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் 9, சந்து 1 விக்கெட்டை சாய்த்தனர். அதற்கு பிறகு தற்போது தான் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே சாய்த்துள்ளனர்.
வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். குறிப்பாக அஸ்வின், ஜடேஜா ஜோடி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அற்புதமாக விளையாடி விக்கெட்டுகளை குவித்து இருந்தது. ஆனால் தற்போது ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதில் குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. புவனேஷ்குமார் 27, ஷமி 26.3, உமேஷ் யாதவ் 20 ஓவர்கள் வீசினார்கள். ஆனால் அஸ்வின் 8 ஓவர்கள் தான் வீசினார். ஜடேஜா ஒரே ஒரு ஓவர்தான் வீசினார்.
122 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான தவானும், கே.எல்.ராகுலும் நிதானமாக விளையாடினர். இருவரும் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்து விளையாடி வருகின்றனர். 24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. கே.எல்.ராகுல் 61(84), தவான் 55(80) ரன்களுடன் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுலுக்கு டெஸ்ட் போட்டியில் இது 10-வது அரைசதம் ஆகும். முதல் இன்னிங்ஸில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்திய அணி 100 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.