AsianGames2026 | தங்கத்தில் மட்டும் சதமடித்து சீனா முதலிடம்.. 4ஆவது இடம்பிடித்த இந்தியா!
ஜப்பானின் அய்சி-நாகோயாவில் நடைபெற்ற 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவுற்றன. இதில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்களுடன் இந்திய அணி 85 பதக்கங்களைப் பெற்று 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் 341 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
ஜப்பானின் அய்சி-நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கின. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் 43 வகையிலான போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்தியாவின் சார்பில் மொத்தம் 503 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 36 வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இன்றுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில், இந்தியா இதுவரை 85 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.
இந்தப் பட்டியலில் 341 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜப்பானும் (269), மூன்றாவது இடத்தில் தென் கொரியாவும் (150) உள்ளன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி ஹாக்கி, கிரிக்கெட், கபடி என மூன்று போட்டிகளிலும் ஆண் - பெண் இருதரப்பிலும் தங்கப் பதக்கம் வென்று சாதித்தன. ஒரே ஆசிய விளையாட்டுப் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு ஹாக்கி அணிகளுமே ஒரே நேரத்தில் தங்கப் பதக்கம் வென்றது ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். மேலும், 1982-க்குப் பிறகு, அதாவது 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி சாதனை படைத்தது.
இவை தவிர கோல்ஃப், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட பிரிவுகளிலும் இந்திய அணியினர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தனர். இந்தியா சார்பாக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா 3 பதக்கம் வென்று அசத்தினார். தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற இவர், மகளிரணி பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தினார். தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.
பிரணவி உர்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்று, கோல்ஃப் விளையாட்டில் தனக்கென ஒரு வரலாற்றைப் படைத்தார். இறுதிநாளான இன்று, ஷூட்-ஆஃப் சுற்றில் வெற்றி பெற்ற குங்கும் முகமது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல், ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் நீரஜ் சௌஹான் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் வில்வித்தைப் பயணத்தை நிறைவு செய்தார்.

