மாறி மாறி சுழன்ற வெற்றிக்காற்று... ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் ஒரு அலசல்

மாறி மாறி சுழன்ற வெற்றிக்காற்று... ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் ஒரு அலசல்
மாறி மாறி சுழன்ற வெற்றிக்காற்று... ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் ஒரு அலசல்

அமீரகத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

எட்டு அணிகள், 56 போட்டிகள், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் என கோலாகலமாக பார்வையாளர்கள் அனுமதியின்றி நடந்துள்ளது. அதில் புள்ளிப்பட்டியில் டாப் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதே நேரத்தில் புள்ளிப்பட்டியிலில் பின்தங்கிய அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன. 

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளே ஆப் சுற்றில் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் போட்டா போட்டி போட்டு தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

லீக் சுற்றில் அணிகளின் பர்பாமென்ஸ் எப்படி? ஒரு அலசல்…

#ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்மித்  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராசியில்லை என்று சொல்லலாம். பலமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தும் 14 போட்டிகளில், 6 வெற்றி மற்றும் 8 தோல்விகளோடு 12 புள்ளிகளை மட்டுமே எடுத்து பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது ராஜஸ்தான். ஸ்டோக்ஸ், உத்தப்பா, ஸ்மித், பட்லர், சஞ்சு சாம்சன், திவாட்டியா, ஆர்ச்சர், ஷ்ரேயஸ் கோபால், ரியான் பராக் என அசத்தலான வீரர்கள் இருந்தும் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது. 

2008 முதல் 2020 வரையிலான ஐபிஎல் சீசன்களில் 2013 மற்றும் 2018இல் மட்டுமே பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் அணி விளையாடியுள்ளது. 2008இல் ராஜஸ்தான் ஐபிஎல் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

#சென்னை சூப்பர் கிங்ஸ் 

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல்  லீக் சுற்றோடு சென்னை அணி நடையை கட்டுவது இதுவே முதல் முறை.  14 போட்டிகளில், 6 வெற்றி மற்றும் 8 தோல்விகளோடு 12 புள்ளிகளை மட்டுமே எடுத்து பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறியுள்ளது. 

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஃபார்ம் அவுட் ஆகியிருந்த பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தே சீசனை முடித்துக் கொண்டது சென்னை. அதோடு சுலபமாக வெல்ல வேண்டிய ஆட்டங்களிலும் கஷ்டப்பட்டு தோல்வியை தழுவியது புள்ளிபட்டியலில் பின்தங்க காரணமாக அமைந்தது. 

பேட்டிங், சுழற் பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் கோட்டை விட்டது தோனி தலைமையிலான அணி. கடைசி மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்த அணிகளின் வேகத்திற்கு தடையாக அமைந்தது சென்னையின் வெற்றி.

#கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் பாதியை பூ பாதையிலும், இரண்டாவது பாதியை சிங்கப் பாதையிலும் விளையாடி அசத்தியது. பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்தும் நடப்பு சீசனின் பிற்பாதியில் பஞ்சாப்புக்கு சாதகமாக கூடி வந்த போதும் பிளே ஆப் வாய்ப்பை நூலிழையில் மிஸ் செய்தது. 

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியுடனான தோல்வி அந்த அணியை தொடரை விட்டே வெளியேற்றிவிட்டது. 14 போட்டிகளில், 6 வெற்றி மற்றும் 8 தோல்விகளோடு 12 புள்ளிகளை மட்டுமே எடுத்து பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்தது. 

இந்த சீசனில் பஞ்சாப்பின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றியது என்றும் சொல்லலாம். ராகுல், மயங்க் அகர்வால், மந்தீப் சிங், கெயில், பூரன் என பலமான பேட்டிங் லைன் அப் இருந்தும் கைக்கு வந்த பிளே ஆப் வாய்ப்பை தட்டி விட்டுள்ளது பஞ்சாப்.  

#கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 

ஆறு முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அனுபவம் கொண்ட கொல்கத்தா அணி இந்த முறையும் அதை செய்யும் எனவே எதிர்ப்பார்க்கப்பட்டது. பேட்டிங்கில் சொதப்பிய போதும் பவுலிங்கில் சாதித்தது கொல்கத்தா. கில், ராணா, கார்த்திக், ராகுல் திரிபாதி மாதிரியான பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் அதில் சொதப்பி விட்டனர். 

சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கிளாஸாக விளையாடியது கொல்கத்தா. அணியின் கேப்டன் மாற்றம், ரஸ்ஸலின் ஃபார்ம் அவுட் மற்றும் கம்மின்ஸின் பவுலிங் மாதிரியான விஷயங்களினால் 14 போட்டிகளில், 7 வெற்றிகளை பெற்று ரன் ரேட் வித்தியாசத்தினால் பிளே ஆப் சுற்றை கொல்கத்தா மிஸ் செய்துள்ளது. 

#ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல் கோப்பையை இந்த முறையாவது வெல்ல வேண்டுமென இந்த சீசனில் விளையாடியது கோலி தலைமையிலான பெங்களூர் அணி. அணியின் பயிற்சியாளர் துவங்கி தேவையில்லாதவற்றை பிடுங்கி எறிந்து விட்டு புது பாய்ச்சலோடு பாய்ந்தது ஆர்.சி.பி. 

முதல் 7 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றது அந்த அணி. இருப்பினும் அதற்கடுத்து விளையாடிய 7 போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றி பெற்றது. பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 14 புள்ளிகளை பெற்று ரன் ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை முந்தி ஆறாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளது ஆர்.சி.பி. 

#சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

வார்னரின் அபாரமான கேப்டன்சியில் ஆரம்பித்து அனைத்தும் அட்டகாசமாக இந்த சீசனில் ஹைதரபாத் அணிக்கு சரியாக அமைந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபார்ம், புவனேஷ்வர் இல்லாத போதும் சிறப்பாக பந்து வீசிய பவுலிங் யூனிட், சாஹாவின் ஃபார்ம், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க் மாதிரியான இளம் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு, நடராஜனின் யார்க்கர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரர்களும் மேட்ச் விண்ணர்களாக ஜொலித்தனர். 

கடைசியாக விளையாடிய மூன்று ஆட்டங்களில் டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை என புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அணிகளை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் 14 புள்ளிகளோடு ரன் ரேட் அடிப்படையில் ஆர்.சி.பி-யை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை சீல் செய்துள்ளது ஹைதராபாத். 

#டெல்லி கேபிடல்ஸ்

14 போட்டிகளில், 8 வெற்றியை பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். பஞ்சாப், ஹைதராபாத் மாதிரியான அணிகளின் கம்பேக் டெல்லிக்கு சற்று கிலி கொடுத்திருக்கலாம். லீக் போட்டிகளின் முதல் பாதி லீக் ஆட்டத்தில் எதிரணியினரின் பந்துவீச்சை வெளுத்து கட்டிய டெல்லி பேட்ஸ்மேன்கள் பிற்பாதியில் சரண்டராகி விட்டனர். 

பெங்களூர் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றதால் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இளம் வீரர்களின் ஆட்டம் டெல்லிக்கு பிளே ஆப் சுற்றில் கைகொடுக்கலாம். 

#மும்பை இந்தியன்ஸ் 

சாம்பியன் அணி என்றால் மும்பை இந்தியன்ஸை சொல்லலாம். ரோகித், டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருனால் பாண்ட்யா, பொல்லார்ட், பும்ரா, போல்ட், ராகுல் சஹார் என மேட்ச் விண்ணர்கள் அதிகம் நிறைந்திருப்பதால் ஒருவர் சொதப்பினாலும் அடுத்தவர்கள் அந்த டாஸ்க்கில் அசத்தி விடுகின்றனர். 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டெத் ஓவர்களில் ரன் குவிப்பது. பவுலிங்கில் பும்ரா, போல்ட் இணையர் அசராமல் பந்து வீசுவது என அவர்களது வெற்றிக்கான காரணத்தை சொல்லிக் கொண்டே  போகலாம். 14 ஆட்டங்களில் 9 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது மும்பை. இதே வேகத்தில் மும்பை ஆடினால் இந்த சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com