பகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..!

பகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..!
பகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..!

இந்தியா- பங்களாதேஷ் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இது இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். இந்தச் சூழலில் பகலிரவு டெஸ்ட் போட்டி கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்போம். 

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தனர். அப்போது சிலர் டெஸ்ட் போட்டிகளில் இனி யாரும் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

அத்துடன் டெஸ்ட் போட்டிகளை சுவாரஸ்யமாக்க சில வழிகளையும் பலர் பரிந்துரைத்தனர். எனினும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் டெஸ்ட் போட்டிக்கு எப்போதும் ஆதரவாகவே கருத்துகளை தெரிவித்து வந்தனர். அவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பு மிக்க போட்டிகள் டெஸ்ட் போட்டிகளே ஆகும். டெஸ்ட் போட்டிகளே ஒரு வீரரின் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வரும் எனத் தெரிவித்தனர்.

அந்தச் சூழலில் ஐசிசி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டது. அதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரசிகர்களை ஈர்க்கலாம் என நினைத்தது. இதுதொடர்பாக 2009-ஆம் ஆண்டு ஐசிசி பொது மேலாளர் டேவிட் ரிச்சர்ட்சன், “டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிரபலபடுத்துவதில் ஐசிசி மிகவும் உறுதியுடன் செயல்படுகிறது. இதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தவும் ஐசிசி தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார். 

இதனையடுத்து பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏனென்றால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மின்னொளியில் சிவப்பு நிற பந்துகளை சரியாக பார்க்க முடியாது. ஆகவே மஞ்சள் நிற பந்துகள், ஆர்ஞ்சு நிற பந்துகள் மற்றும் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டது. 

மேலும் 80 ஓவர்கள் தாங்கும் வெள்ளை நிற பந்துகளுடன் விளையாடவும் திட்டமிடப்பட்டது. இதற்கு மீண்டும் சில வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் டெஸ்ட் போட்டியை பகலில் சிவப்பு நிற பந்துகளுடன் தான் விளையாட வேண்டும் என்று தெரிவித்தனர். எனினும் 2009-ஆம் ஆண்டு சோதனை முயற்சியாக இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி பிங்க் நிற பந்துகளுடன் நடத்தப்பட்டது. அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து முதல் முறையாக 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் நவம்பர் மாதம் முதல் சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு அடிலெய்ட் மக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடைபெற்றது. அதில் 81 சதவிகித மக்கள் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண விருப்பம் தெரிவித்தனர்.

அதன்பிறகு அடிலெய்ட் மைதானத்தில் 5 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று உள்ளன. 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டி மட்டும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவில்லை. ஏனென்றால் அந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இருந்தால், பங்கேற்மாட்டோம் என இந்திய அணி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.. ஆகவே அந்தப் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற வில்லை.

இந்தப் பிங்க் நிற பந்துகளில் சூரியன் மறையும் நேரத்தில் அதிகமாக ஸ்விங் ஆகும் என கூறப்படுகிறது. அத்துடன் இதுவரை மொத்தமாக 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் பிங்க் நிற பந்துகளுடன் நடைபெற்று உள்ளன. இவை அனைத்திலும் முடிவுகள் வந்துள்ளன. ஒரு போட்டி கூட டிராவில் முடிவடையவில்லை. இந்தச் சூழலில் தற்போது இந்தியா தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளது.

இந்தப் போட்டியில் மற்றொரு முக்கிய சிறப்பு அம்சமும் உள்ளது. அது என்னவென்றால் இதுவரை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் குக்குபரா மற்றும் டியூக் நிறுவனத்தின் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வெற்றிப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com