8 மாதங்கள்; 8 கேப்டன்கள்; எங்கே செல்லும் இந்த பாதை? பிசிசிஐயின் திட்டம்தான் என்ன?

8 மாதங்கள்; 8 கேப்டன்கள்; எங்கே செல்லும் இந்த பாதை? பிசிசிஐயின் திட்டம்தான் என்ன?
8 மாதங்கள்; 8 கேப்டன்கள்; எங்கே செல்லும் இந்த பாதை? பிசிசிஐயின் திட்டம்தான் என்ன?

காயங்கள், கொரோனா பாதிப்பு போன்றவற்றால் வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் வெவ்வேறு வீரர்கள் கேப்டனாக செயல்படுவதை தவிர்க்க முடியாதென எடுத்துக் கொண்டாலும், அடுத்து நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரிலும் 'கேப்டன்' ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பது இன்னும் சில கேள்விகளை எழுப்புகிறது.

ஏதோ ஒரு போட்டித் தேர்வை எழுதப்போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்தத் தேர்வின் பொது அறிவு பகுதியில் 'இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் யார்?' என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என நான்கு ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் முழுமனதோடு எந்த ஆப்சனை சரியான பதிலென டிக் அடிப்பீர்கள்? நீங்கள் எதை வேண்டுமானாலும் டிக் அடித்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுத்ததுதான் சரியான பதில் என உங்களால் உறுதியாக கூறவே முடியாது. ஏனெனில் உங்களுக்கான கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட சமயத்தில் இந்திய அணியின் கேப்டனாக ஒருவர் இருந்திருப்பார். நீங்கள் அந்தத் தேர்வை எழுதும் தினத்தன்று வேறொருவர் கேப்டனாக இருந்திருப்பார். நீங்கள் எழுதிய விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்லும்போது இன்னொருவர் கேப்டனாக இருப்பார். இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களின் தற்போதைய நிலை!

கடந்த அக்டோபர் - நவம்பரில் துபாயில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடந்து முடிந்தது. அந்தத் தொடரோடு விராட் கோலி டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகினார். மற்ற ஃபார்மட்களுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ரோகித் சர்மா மூன்று ஃபார்மட்களுக்குமான கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த உலகக்கோப்பைத் தொடர் நடந்து முடிந்து முழுமையாக 8 மாதங்கள் ஓடியிருக்கிறது. நியாயப்படி பார்த்தால் ஒரு கேப்டனாக ரோகித் இதற்குள் முழுமையாக செட்டில் ஆகியிருக்க வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் ஐ.சி.சி தொடர்களை மனதில் வைத்து தனக்கே தனக்கான ஒரு அணியை கட்டியெழுப்ப தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. காரணம், இதையெல்லாம் நடத்தும் அளவுக்கு அவர் கேப்டன் பதவியில் இன்னமும் முழுமையாக அமரவே இல்லை. மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்து கடந்த 8 மாதங்களில் மட்டும் இந்திய அணியை 8 கேப்டன்கள் தலைமை தாங்கியிருக்கிறார்கள்.

அந்த உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு இப்போது வரை இந்திய அணி 17 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறது (இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரை). இந்த 17 போட்டிகளில் 10 போட்டிகளுக்கு மட்டுமே ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். 5 போட்டிகளுக்கு ரிஷப் பண்ட்டும் 2 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் 6 ஓடிஐ போட்டிகளில் இந்திய அணி ஆடியிருக்கிறது. இதில், 3 போட்டிகளுக்கு ராகுலும் 3 போட்டிகளுக்கு ரோகித்தும் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறது. இதில் 3 போட்டிகளுக்கு கோலியும் 2 போட்டிகளுக்கு ரோகித்தும் ரஹானே, ராகுல், பும்ரா ஆகியோர் தலா ஒரு போட்டிக்கும் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்கள். அடுத்து வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான ஓடிஐ தொடரில் தவான் இந்திய அணியை வழிநடத்தவிருக்கிறார். அவரோடு சேர்த்தால் கடந்த 8 மாதங்களில் மட்டும் இந்திய அணிக்கு 8 கேப்டன்கள்!

'இத்தனை கேப்டன்களோடு ஆடுவது எங்கள் திட்டத்திலேயே இல்லை' என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் பேசியிருந்தார். காயங்கள், கொரோனா பாதிப்பு போன்றவற்றால் வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் வெவ்வேறு வீரர்கள் கேப்டனாக செயல்படுவதை தவிர்க்க முடியாதென எடுத்துக் கொண்டாலும், அடுத்து நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரிலும் 'கேப்டன்' ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பது இன்னும் சில கேள்விகளை எழுப்புகிறது.

ஐ.பி.எல் க்கு பிறகு காயங்கள், கொரோனா என இத்தனை நாட்களாக ஓய்விலிருந்த ரோகித் இப்போதுதான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வந்திருக்கிறார். இன்னும் ஒரு 10 நாட்களிலேயே வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. அதற்குள்ளேயே அவருக்கு மீண்டும் ஓய்வு எதற்கு? தொடர்ச்சியாக காயங்களில் சிக்கக்கூடியவர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூட இருக்கலாம். ஆனால், ரோகித்திற்கு 35 வயது நெருங்கிவிட்டது. காயங்களினால் அடிக்கடி அவதிப்படக்கூடியவர் என்கிற விஷயமெல்லாம் முன்பே தெரிந்ததுதான் எனும்போது அவரை ஏன் மூன்று ஃபார்மட்களுக்குமான கேப்டனாக அறிவிக்க வேண்டும்? கோலிக்கு பிறகு வேறு இளம் வீரர்களின் கையில் அணியை ஒப்படைத்திருக்கலாமே? இந்த 8 மாதங்கள் கேப்டன் பதவியில் நிகழ்த்தப்பட்ட மியுசிக்கல் சேர் ஆட்டமாவது தவிர்க்கப்பட்டிருக்குமே?

ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர் கேப்டன் பதவியை முழுமையாகப் பெற்று கற்றுத் தேர்வதற்கான காலகட்டமாக கூட இந்த 8 மாதங்கள் அமைந்திருக்கக்கூடும். ஒரே நிரந்தரமான கேப்டன் இல்லாமல் போனதால் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டமோ இலக்கோ இல்லாமல் இந்திய அணி பயணித்துக் கொண்டிருப்பதை போல தோன்றுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லை. ஆனால், இப்போது வரை இதுதான் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனாக இருக்கக்கூடும் என ஒரு கணிப்பையே கூற முடியவில்லை. அனுபவ வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த இளம் வீரர்களை வைத்துக் கொண்டே உலகக்கோப்பைக்கு துணிச்சலாக செல்வார்களா என்றால் அதுவும் இல்லை. நட்சத்திர வீரர்கள் இல்லாமல் அந்தத் தொடருக்கு செல்லவே மாட்டார்கள். எனில், அந்த வீரர்களும் உள்ளே வரும்போது கடைசி நேரத்தில் சரியான காம்பீனேஷன் எது என்பதை எப்படி கண்டடைவார்கள்?

கேப்டன் பதவியில் மட்டுமில்லை. மற்ற சில முக்கியமான வீரர்களின் விஷயத்திலுமே கூட பிசிசிஐ புதிய அணுகுமுறைகளை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா போன்றோருமே கூட வெகு சமீபத்தில்தான் நல்ல ஓய்வை பெற்று இளைப்பாறியிருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் அவர்களுக்குமே மீண்டும் ஓய்வை வழங்கியிருக்கிறார்கள். எனில், பிசிசிஐ யின் திட்டம்தான் என்ன? வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி அயர்ச்சியின்றி துடிப்பாக வைத்திருக்க பிசிசிஐ முயல்கிறதா?

அதுதான் திட்டமெனில், அதை முழுவதுமாக குறை கூறவும் முடியாது. முழுவதுமாக ஆதரித்தும் விட முடியாது. கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்ற போது 'தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுவதால் வீரர்கள் ரொம்பவே அயர்ச்சியாக இருக்கிறார்கள். மனரீதியாக சோர்வடைந்திருக்கிறார்கள்' என்கிற காரணம் பிரதானமாக கூறப்பட்டது. இந்திய அணியின் முக்கிய வீரரான பும்ராவே இதை ஆமோதித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த விஷயத்தை முன்வைத்து பார்த்தால் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி துடிப்பாக வைத்திருக்க எண்ணுவதை வரவேற்கலாம்.

இங்கிலாந்து அணியும் இதே பாணியை கையாண்டிருக்கிறது. காயங்கள், கொரோனா பாதிப்பு எதுவுமே இல்லையென்றாலும் முக்கியமான வீரர்களுக்கு தாமாக முன்வைத்து ஓய்வை வழங்கும். 5 போட்டிகள் கொண்ட தொடர் எனில் ஒரு சில முக்கியமான வீரர்களை 5 போட்டிகளிலும் ஆட வைக்கமாட்டார்கள். போதுமான ஓய்வை அளித்து தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த முறையை ஆஹா ஓஹோவென புகழ்பவர்களும் உண்டு. இதனால் பெரிய பிரயோஜனம் இல்லை என அதிருப்தி தெரிவிப்பவர்களும் உண்டு. அதிருப்தி குரல்களில் முக்கியமானது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ரூட்டுடையது. ஒரு கேப்டனாக ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ப்ளேயிங் லெவனை இறக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம். ஆனால், கிரிக்கெட் போர்டின் சுழற்சி முறை கொள்கையால் அதை ரூட்டால் நிகழ்த்த முடியாமல் போனது. இதனால் முக்கியமான வீரர்களின்றி முக்கியமான போட்டிகளை இழக்கவும் செய்தார்கள். ரூட்டின் அதிருப்திக்கு இதுதான் காரணம்.

ஆக, இந்த முறையில் லாப நஷ்டம் இரண்டும் கலந்தே இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ஓய்வு வேண்டுமெனில் ஐ.பி.எல் ஐ தியாகம் செய்ய சொல்லுங்கள் என உலகக்கோப்பைத் தோல்வியின் போது பல ரசிகர்களிடமிருந்தும் அதிருப்தி குரல்கள் வெளிப்பட்டிருந்தது. இந்தியாவின் உலகக்கோப்பைத் தோல்விக்கு ஐ.பி.எல் ஐ காரணம் கூறவே முடியாது. ஆனால், வீரர்களின் சோர்விற்கு ஐ.பி.எல் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக அதை தியாகம் செய்ய சொல்வது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு. அப்படி ஒரு காரியத்தை பிசிசிஐயும் விரும்பாது. வீரர்களும் செய்யமாட்டார்கள்.

நிலையான கேப்டன். நிலையான திட்டம். நிலையான அணி என்பது இன்றியமையாதது. இந்திய அணி அதைத் தவிர்த்து வேறு முயற்சிகளை செய்யுமெனில் அதன் ரிசல்ட் எப்படியிருக்கும் என்பதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும். காத்திருப்போம்!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com