பிசிசிஐ வருட ஒப்பந்தம்: சஞ்சு சாம்சன் மீண்டும் சேர்ப்பு... கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா!

பிசிசிஐ வருட ஒப்பந்தம்: சஞ்சு சாம்சன் மீண்டும் சேர்ப்பு... கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா!

2022-2023ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 2022-2023 சீசனுக்கான இந்தியாவின் மூத்த ஆண்கள் அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி காயத்திலிருந்து மீண்டு வந்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜ் A+ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். காயத்திற்கு பிறகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கே.எல்.ராகுல் கிரேட் A பிரிவில் இருந்து B கிரேடுக்கு கீழ் இறக்கப்பட்டுள்ளார்.

A+, A, B, C என 4 பிரிவுகளின் கீழ் வீரர்கள் சம்பள வித்தியாசத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் A+ பிரிவிற்கு ஒரு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும், A பிரிவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமும், B பிரிவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமும், C பிரிவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டுவருகிறது.

இதன்கீழ் வெளியான வீரர்கள் ஒப்பந்த பட்டியல்:

A+ பிரிவு : ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

A பிரிவு : ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்

B பிரிவு : சேதேஷ்வர் புஜாரா, கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில்.

C பிரிவு : உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்.

தகுதி உயர்த்தப்பட்ட வீரர்கள்!

பல இந்திய வீரர்கள் தற்போது தங்களுடைய மிகச்சிறந்த நிலையில், லைஃப்-டைம் பார்மில் இருந்து வருகின்றனர். அந்த வகையிலான வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் போன்ற வீரர்கள் முந்தைய கிரேட் பிரிவில் இருந்து தற்போது தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கிரேட் உயர்த்தப்பட்டவர்களில் ரவீந்திர ஜடேஜா A பிரிவில் இருந்து A+ பிரிவுக்கும், அக்சர் பட்டேல் B பிரிவில் இருந்து A பிரிவுக்கும், ஹர்திக் பாண்டியா C பிரிவில் இருந்து A பிரிவுக்கும், சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் போன்றவர்கள் C பிரிவில் இருந்து B பிரிவுக்கும் தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தகுதி கீழ் இறக்கப்பட்ட வீரர்கள்?

முந்தைய ஆண்டு ஒப்பந்த பட்டியலில் உயர் பிரிவில் இருந்த பல வீரர்கள் தற்போது கிரேட் பிரிவில் கீழ் இறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் A பிரிவில் இருந்த கே.எல்.ராகுல் தற்போது அடுத்த கட்ட பிரிவான B பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் B பிரிவில் இருந்து C பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புதிதாக ஒப்பந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வீரர்கள்!

இந்த 2022-2023ஆம் ஆண்டு ஒப்பந்த பட்டியலை பொறுத்தவரையில் சிறந்த பார்மில் இருக்கும் பல புதிய வீரர்கள் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளனர். அந்தப்பட்டியலில் சிறந்த ஒருநாள் போட்டி சராசரியை வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளார். மற்ற வீரர்களை பொறுத்தவரையில் குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத் போன்ற வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய ஒப்பந்த பட்டியலில் இருந்த மூத்த வீரர்கள் முழுவதுமாக நீக்கம்!

முந்தைய 2021-2022ஆண்டு ஒப்பந்த பட்டியலில் B பிரிவில் இருந்த அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் C பிரிவில் இருந்த புவனேஷ்வர் குமார், விருத்திமான் சாஹா, மயங்க் அகர்வால், தீபக் சாஹர் மற்றும் ஹனுமா விஹாரி முதலிய 7 வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com