3 நாளில் 7 சதங்கள் விளாசல்! பிட்ச் இவ்ளோ பிளாட் ஆவா ரெடி பண்ணுவீங்க? நெட்டிசன்கள் ஆதங்கம்
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 657 ரன்கள் குவித்த பிறகு பாகிஸ்தான் அணியும் பதிலடி கொடுத்து வருகிறது.
மாடர்ன் டே கிரிக்கெட்டில் முதல் இன்னிங்க்ஸில் 7 சதங்கள்!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு சாதகமான பிளாட்டான் ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்து சாதனை மேல் சாதனை படைத்தது. இங்கிலாந்து அணியின் ஷாக் கிராலி, ஒல்லி போப், ஹரி ப்ரூக், பென் டக்கெட் என 4 வீரர்கள் அடுத்தடுத்து 4 சதங்களை விளாச முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 657 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், அடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனர்கள் அப்துல்லா மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்கள் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி ஒரு வழியாக முதல் விக்கெட்டை 225 ரன்களில் வீழ்த்தியது.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் விளாச 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 400 ரன்களை கடந்தது பாகிஸ்தான் அணி. தொடர்ந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 3ம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 499 ரன்கள் எடுத்துள்ளது.
இதற்கு முன் முதல் இன்னிங்க்ஸில் 7 சதங்கள் அடிக்கப்பட்டதா?
இதற்கு முன் இரண்டு அணிகளின் முதல் இன்னிங்க்ஸ்களில் இத்தனை சதங்கள் அடிக்கப்பட்டதா? இல்லை எத்தனை சதங்கள் அடிக்கப்பட்டது? என்று கேட்டால், முன்னதாக 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 4 சதங்கள் அடித்த நிலையில், அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்களும் 4 சதங்கள் அடித்து அசத்தி இருந்தனர்.
தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் (114), க்ரிம் ஸ்மித் (126), காலிஸ் (147), பிரின்ஸ் (131) என 4 சதங்களை விளாசினர்.
வெஸ்ட் இண்டிஸ் அணியில் க்றிஸ் கெயில் (317), ரமேஷ் சர்வன் (127), சந்தர்பால் (127). டிவைன் பிராவோ (107) என 4 சதங்களை அடிக்க அந்த போட்டி டிராவில் முடிந்தது.
ஒரே இன்னிங்க்ஸில் அதிக சதங்களை பதிவு செய்த அணிகள்!
இங்கிலாந்து அணி தற்போது ஒரு இன்னிங்க்ஸில் 4 சதங்கள் பதிவு செய்துள்ள நிலையில், இதற்கு முன்னதாக 1955ல் ஆஸ்திரேலியா அணி 5 சதங்களும், 2001ல் பாகிஸ்தான் அணி 5 சதங்களும் ஒரே இன்னிங்ஸில் பதிவு செய்துள்ளனர்.
டெஸ்ட் பிட்சா இது ஷாக் ஆன மைக்கேல் வாகன்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்துவரும் நிலையில், டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், “இது டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளமா” என பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்து அணி ஆடிய போது மைக்கேல் வாகன் பதிவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, இங்கிலாந்து அடிக்கும் போது மட்டும் நல்லா இருந்துச்சா என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். முன்னதாக மைக்கேல் வாகன் பதிவிட்டிருந்த பதிவில், ”இந்த இங்கிலாந்து அணி விளையாடுவதை பார்த்து ரசிக்கிறேன்.. உங்கள் ஜூனியர் டீமுக்கு டெஸ்ட் ஆடுவதை வேறொரு ஆட்டம் போல் காட்டுகிறார்கள்.. நிறைய ஃபன்னாக இருக்கிறது.. அவர்கள் டெஸ்ட் ஆட்டத்திற்கு புதிய மூச்சுக்காற்றை கொடுக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி கலாய்த்து வருகின்றனர்.
டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமா இது!
சிறிய நாடுகள் கூட டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களை பிரத்யேகமாக தயார் செய்து சிறந்த ஆட்டங்களை கொடுப்பதற்கான முயற்சியில் இருக்கும் போது, யாரும் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாததாலோ என்னவோ இன்னும் பழைய பிளாட் பிட்ச்களையே பயன்படுத்தி வருகிறது பாகிஸ்தான் அணி.
ஆடுகளத்தின் தன்மையால் தான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷகீத் மஹ்மூத் கூட மோசமாக ரன்களை விட்டுக்கொடுத்து படைக்ககூடாத மோசமான ரெக்கார்டை படைத்துள்ளார்.