சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன் கைது
14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரனை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (60). பாஜகவை சேர்ந்த கிராமப் பஞ்சாத்து உறுப்பினரான இவர், தனது கிராமத்தில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த டீக்கடை உதவிப்பணியாளர் ஒருவரை தேடிய இவர், தனது கடைக்கு வந்த 14 வயது பள்ளிச் சிறுமி ஒருவரை பணிக்கு வந்தால் பணம் தருவதாக அழைத்துள்ளார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அச்சிறுமி, வறுமையின் காரணமாக பணிக்கு வந்துள்ளார். அவருக்கு நாள் ஒன்று ரூ.25 முதல் ரூ.50 வரை சம்பளம் வழங்கியுள்ளார் சந்திரசேகர்.
சில நாட்கள் சென்றதும் தனது வீட்டில் கொஞ்சம் வேலை இருப்பதாகவும், அதை செய்தால் பணம் தருவதாகக் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமியை வீட்டிற்குள் வைத்து கதவை அடைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமி சத்தம்போட முயல, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமிக்கு ரூ.50 கொடுத்துவிட்டு, இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படிச் சொன்னால் சிறுமியையும், அவரது குடும்பத்தையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான் அந்தக் கொடூரன்.
இதேபோன்று 4 மாதங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாறுபாடுகள் தெரிய, அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்ததில் சிறுமி கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த தாயார் சிறுமியை விசாரிக்க, அவர் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சந்திரசேகரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
(Courtesy : The News Minute)