ரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் - ஐபிஎல் 2020 விருதுகள்!

ரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் - ஐபிஎல் 2020 விருதுகள்!
ரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் - ஐபிஎல் 2020 விருதுகள்!

விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர். நடக்குமா, நடக்காதா என்ற பல சந்தேகங்களுக்கு இடையே கொரோனா காலத்திலும் கொஞ்சம் கூட இடையூறே இல்லாமல் ஆரம்பித்த வேகம் தெரியாமல் இறுதிப்போட்டியே முடிந்துவிட்டது. இப்பொழுதுதான் சென்னை - மும்பை இடையே முதல் லீக் போட்டி நடைபெற்றது போல் உள்ளது.

நடப்பு சீசனில் ரசிகர்களுக்கு பல்வேறு வீரர்கள் தங்களது ஆட்டத்தின் மூலம் விருந்து படைத்தார்கள். பேட்டிங், பவுலிங் என பலரும் மிரட்டியிருக்கிறார்கள். அப்படி சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கே.எல்.ராகுல்

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் லீக் சுற்றின் பெரும்பாலான போட்டிகளில் சொதப்பாமல் ரன்களை குவித்தவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். லீக் சுற்றில் மட்டும் விளையாடிய அவர் 670 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதம் அடங்கும். மொத்தம் 23 சிக்ஸர், 58 பவுண்டரி விளாசியுள்ளார். இவரது பேட்டிங் சராசரி 55.83, பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் - 129.34. இவர் வசம் ஆரஞ்சு கேப் உள்ளது. அதற்கான விருது அவருக்கு அளிக்கப்பட்டது. அதேபோல், ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரருக்கான விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கான விருதினை ஹர்திக் பாண்ட்யா பெற்றுக் கொண்டார்.

ரபாடா

பந்துவீச்சில் எதிரணி வீரர்களை மிரட்டி வந்தவர் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் பெரும்பாலும் எல்லா போட்டிகளிலும் எப்படியோ விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் மொத்தம் 30 விக்கெட் சாய்த்துள்ளார். இவருக்கு கடும் போட்டியாக இருந்தவர் மும்பை இண்டியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. அவர் 27 விக்கெட் சாய்த்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்திய ரபாடா வசம் பர்பிள் கேப் இருக்கிறது. அதற்கான விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

ட்ரெண்ட் போல்ட்

மும்பை இண்டியன்ஸ் அணியின் பல போட்டிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர் ட்ரெண் போல்ட். பும்ராவை விட பல போட்டிகளில் எதிரணி வீரர்களை தன்னுடைய பந்துவீச்சில் திணற வைத்தார். இந்த சீசனில் அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ஆட்டத்தின் தொடக்கத்திலே அதாவது பவர் பிளேவிலேயே எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார். அதற்காக நடப்பு சீசனின் ‘பவர் பிளே’ விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜோப்ரா ஆர்ச்சர்

மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player) விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோப்ரா ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் 20 விக்கெட்டுகளை நடப்பு சீசனில் வீழ்த்தியுள்ளார். 5 கேட்சுகளை பிடித்துள்ளார். அதேவேளையில் 10 சிக்ஸர்களையும் விளாசி இருக்கிறார். ஆர்ச்சரின் நேர்த்தியான பந்துவீச்சில் பல வீரர்கள் ரன் குவிக்க திணறி இருக்கிறார்கள். ஆனால், ராஜஸ்தான் அணியில் இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேறு பவுலர்கள் யாரும் இல்லை என்பது வேதனையான விஷயம். 

தேவ்தத் படிக்கல்

முதல் சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கலுக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது. முதல் ஐபிஎல் சீசன் என்பது அல்லாமல் அவரது ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இவர் சிக்ஸர்களை காட்டிலும் நேர்த்தியான கிளாசிக் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லவராக இருந்துள்ளார். பெங்களூர் அணிக்கு கிறிஸ் கெயில் இல்லாத குறையை நிரப்பியுள்ளார் அவர். அவரது பொறுமையான நேர்த்தியான ஆட்டம் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளது.

இஷான்  கிஷன் 

வழக்கமாக டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் இருப்பார்கள். ஐபிஎல் தொடரிலும் அப்படி தான். கெயில், பொல்லார்டு, ரஸ்ஸல் என அதிரடியில் கடந்த காலங்களில் மிரட்டியுள்ளனர். நடப்பு சீசனில் கூட நிக்கோலஸ் பூரன் அப்படி ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் மும்பை அணியின் இஷான் கிஷன். அதனால் அதற்காக விருதையும் அவர் வென்றார்.

மொத்தமாக 14 இன்னிங்ஸ் விளையாடிய அவர் 30 சிக்ஸர்களை அடித்து மிரட்டியுள்ளார் அவர்.  மொத்தமாக 516 ரன்களை இந்த சீசனில் கிஷன் குவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com