6 அடி உயரத்தில் "தோனி" கேக் - 16 இடங்களில் விராட் கோலி குறித்து டாட்டூ போட்ட ரசிகர்..!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தோனி உருவத்திலான கேக் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
சுமார் ஆறு அடி உயரம் கொண்ட தோனி கேக்கை ரசிக்கும் வாடிக்கையாளர்கள், அதற்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மகேந்திர சிங் தோனியை கௌரவிக்கும் விதமாக இந்த கேக்கை வடிவமைத்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், ஒடிஷாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விராட் கோலியின் முகம் மற்றும் அவரது சாதனைகள் அடங்கிய தகவல்களை தனது உடம்பில் பச்சை குத்தியுள்ளார்.
கட்டாக்கில் வசிக்கும் பின்ட்டு பெஹரா என்ற இளைஞர் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். சிறு வயதிலிருந்து கோலியின் விளையாட்டிற்கு அடிமையான பின்ட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கோலியின் ஜெர்ஸி எண் 18, அவரது முகம், பேட்டிங் ஸ்டைல் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் தனது உடலில் 16 இடங்களில் பச்சை குத்தியுள்ளார்.

