`எங்கள் வீட்டில் எல்லா நாளும்...’- கத்தார் கால்பந்து திருவிழாவில் கலக்கும் சகோ’ஸ்!
கத்தார் கால்பந்து திருவிழாவில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சகோதரர்கள் சிலர் உள்ளனர்! அவர்கள் யார் என்ற விரிவான விவரங்கள் இதோ...
கலர் ஃபுல்லாக தொடங்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துவரும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் ஏற்கனவே பல உற்சாகமான உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ள நிலையில், முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வீ-யின் மகன் திமோதி வீஹ், கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கோல் அடித்தது போன்ற சுவாஸ்யமான நிகழ்வுகளும் நடந்துள்ளது.
ஆனால், கத்தார் உலகக் கோப்பை போட்டியில் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதைகள் வீஹ்ஸுடன் முடிந்துவிடவில்லை. உலகக் கோப்பை தொடரில் தனது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கால்பந்து வீரரின் கனவாகும். அந்த கனவை நனவாக்குவதோடு தனது சகோதரருடன் இணைந்து விளையாடுவது மிகவும் சிறப்பானதாகும்.
செர்பியா
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம்பெற்றுள்ள செர்பியா அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் செர்ஜஜ் மிலின்கோவிக்-சாவிக் அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார். 27 வயதான அவர், 2022-23 சீசனில் லாசியோ அணிக்காக 20 போட்டிகளில் பங்கேற்று ஐந்து கோல்களை அடித்ததோடு ஏழு கோல்கள் அடிக்க காரணமாகவும் இருந்துள்ளார். அதேபோல் அவரது சகோதரர் வனஜா மிலின்கோவிக்-சாவிக்; டொரினோவின் கோல்கீப்பராக உள்ளார். செர்கேஜ் மற்றும் வனஜா ஆகிய இருவரும் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம்பெற்றுள்ள செர்பியா அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
கானா
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று கலக்கிவரும் 26 பேர் கொண்ட கானா அணியில் ஜோர்டான் அய்யூ மற்றும் ஆண்ட்ரே அய்வ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 1992-93 சீசனில் மார்சேயுடன் சாம்பியன்ஸ் லீக்கை வென்ற அபேடி அய்வ், பீலேயின் மகன்கள் ஆய்வ்ஸ். கானா தேசிய அணியின் முன்னாள் கேப்டனான இவர், இதற்கு முன்பு 2010 மற்றும் 2014 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவரது இளைய சகோதரர் ஜோர்டான் அய்யூ 2014 உலகக் கோப்பையிலும் பங்கேற்றார். ஆண்ட்ரே அய்வ் தற்போது கத்தார் ஸ்டார்ஸ் லீக் அணியான அல் சத்திற்காக விளையாடி வருகிறார். ஜோர்டான் அய்யூ கிரிஸ்டல் பேலஸ் அணியின் முன்னணி வீரராக விளையாடி வருகிறார்.
பெல்ஜியம்
ஈடன் ஹசார்ட் மற்றும் தோர்கன் ஹசார்ட் ஆகியோர் பெல்ஜியம் அணியில் சில காலமாக இடம் பெற்றுள்ளனர். 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணிக்காக விளையாடும் சகோதரர்கள் இருவரும் உலகக் கோப்பையில் ஒன்றாக விளையாடுவது இது இரண்டாவது முறையாகும். ஈடன் மற்றும் தோர்கன் ஆகிய இருவரும் விங்கர்களாகவும் தாக்குதல் மிட்ஃபீல்டர்களாகவும் விளையாட முடியும். ஈடன் ஹசார்ட், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். அதேபோல் தோர்கன் ஹசார்ட் பொருசியா டார்ட்மண்ட் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஸ்பெயின்
இனாக்கி வில்லியம்ஸ் மற்றும் அவரது இளைய சகோதரர் நிகோ வில்லியம்ஸ் ஆகியோர் ஸ்பானிஷ் கிளப் அத்லெட்டிக் பில்பாவோவுக்காக விளையாடுகின்றனர். நிகோவை விட எட்டு வயது மூத்தவரான இனாக்கி எப்போதும் தனது இளைய சகோதரனை கவனித்துக் கொள்வார். இருப்பினும், இரு சகோதரர்களும் 2022 உலகக் கோப்பை தொடரில் ஒரே அணிக்காக விளையாட மாட்டார்கள். இனாகி தனது பிறந்த நாடான கானா அணிக்காக விளையாடுவார், அதே நேரத்தில் நிகோ ஸ்பெயினின் அணியின் 26 பேர் கொண்ட குழுவில் ஒரு வீரராக கத்தாருக்குச் சென்றுள்ளார்.
பிரான்ஸ்
லூகாஸ் மற்றும் தியோ ஹெர்னாண்டஸ் ஆகியோர் நடப்பு உலகச்சாம்பியனான பிரான்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக லூகாஸ் ஹெர்னாண்டஸ் இப்போது மீதமுள்ள போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவரது சகோதரர் தியோ ஹெர்னாண்டஸ் அவருக்கு பதிலாக ஆடும் அணியில் இடம் பிடித்தார். லூகாஸ் ஹெர்னாண்டஸ் பன்டெஸ்லிகா, பேயர்ன் முனிச்சிற்காக விளையாடுகிறார், அதே நேரத்தில் தியோ ஹெர்னாண்டஸ் ஏசி மிலன் அணியின் முக்கிய வீரராக உள்ளார்.