No.1 டீம்க்கு ஏன் இந்த நிலை?.. ஆஸ்திரேலிய அணியின் படுதோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்!

No.1 டீம்க்கு ஏன் இந்த நிலை?.. ஆஸ்திரேலிய அணியின் படுதோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்!
No.1 டீம்க்கு ஏன் இந்த நிலை?.. ஆஸ்திரேலிய அணியின் படுதோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்த பிறகு, பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிரட்டிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னால், இந்த ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்று பரவலாக கூறப்பட்டது, ஆனால் தற்போது அனைத்து தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா அணி கடைசி 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டும் தான் தொடரை சமன் செய்ய முடியும். அதையாவது ஆஸ்திரேலியா முயற்சிக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பலரின் கருத்தாக இருந்துவருகிறது. நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்துவரும் ஆஸ்திரேலியா அணி, பல இடங்களில் சறுக்கலை சந்தித்தது. ஆஸ்திரேலியா போட்டியை வலுவான ஒன்றாக மாற்றவேண்டிய இடத்தில் எல்லாம், தானாகவே போட்டியை கைவிட்டுவிடும் விதமாக விளையாடியது என்றால் மறுக்க முடியாது. ஆஸ்திரேலியா போட்டியில் சறுக்குவதற்கு காரணமாக அமைந்த சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

1. பயிற்சி ஆட்டத்தை தவிர்த்து வலைபயிற்சியில் மட்டும் ஈடுபட்ட ஆஸ்திரேலியா!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே, சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்க மறுத்துவிட்டு நேரடியாக போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்தது. மாறாக அஸ்வினை எதிர்கொள்வதற்காக, அஸ்வினை போலவே பந்துவீசக்கூடிய டூப்ளிகேட் அஸ்வினை வரவழைத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. ஆஸ்திரேலியா பயிற்சி போட்டியில் விளையாடாமல் தவிர்த்தது சுரேஷ் ரெய்னா முதலிய முன்னாள் வீரர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

பயிற்சி போட்டியில் பங்கேற்காததற்கு வீரர்கள் காயமடையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்பட்டாலும், முன்னதாக இந்தியாவிற்கு வந்தபோது தங்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஒரு ஆடுகளமும், மெயின் போட்டிகளில் விளையாட வேறொரு ஆடுகளமும் மாற்றிமாற்றி கொடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணி குற்றஞ்சாட்டியது. பயிற்சி போட்டியில் பங்கேற்காமல் அஸ்வினை மட்டும் எதிர்கொள்ள வலைப்பயிற்சியில் ஈடுபட்டு மெயின் போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தார் ரவீந்திர ஜடேஜா. ஒருவேளை ஜடேஜா இல்லாமல் போயிருந்தால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரையே முதல் போட்டியில் பதிவு செய்திருக்கும். முக்கியமாக ஆஸ்திரேலியா பயிற்சியாட்டத்தில் விளையாடி இருந்தால், ஜடேஜாவை எதிர்கொள்ள இன்னும் ஏதுவாகவும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலுக்கு எதிராக பந்துவீச்சு திட்டத்தையும் வகுக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

ஆடுகளத்தின் தன்மையை உணராமல் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்!

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும் வீரர்கள், பந்தின் சுழற்சியை முன்கூட்டியே தடுப்பதற்காக பந்து பிட்சாகும் இடத்திலிருந்து விளையாடுவது சிறப்பான அணுகுமுறையாக பார்க்கப்படும். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பவுலர்களின் லெந்தை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் பெரிதாக எடுக்கவில்லை. மாறாக அதிக ரிவர்ஸ் ஷாட்களை விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

மேலும் இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் முடிவில் கடைசி 12 ஓவர்களில் சிறப்பான எதிராட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 60 ரன்களை பெற்றிருந்தது. போட்டியின் இறுதிநாளில் பனியின் காரணத்தினாலும், போட்டி முழுவதும் பந்துவீசிய களைப்பில் இருந்த பந்துவீச்சாளர்களை டாமினேட் செய்து யோசிக்க விடாமல் பேட்டிங் செய்தது சிறப்பாக அமைந்தாலும், மறுநாள் ஆடுகளம் தயார் செய்யப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பிய ஆஸ்திரேலியா, எளிதாகவே விக்கெட்டுகளை இழந்தது. போட்டியை நான்காவது நாளிற்குள் செல்வதற்குள் 250+ ரன்களை ஆஸ்திரேலியா எட்டியிருந்தாலும், போட்டியை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவிற்கே சாதகமாக அமைந்திருக்கும்.

நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருந்தும் அதிக ஓவர்களை வீசவில்லை!

என்னதான் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருந்துவரும் பேட் கம்மின்ஸ் அதிக ஓவர்களை வீசவில்லை என்பது ஆச்சரியமாகவே இருந்தது. அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் இருவரும் அவர்களுடைய உயரத்தை சாதகமாக பயன்படுத்தி சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாளும் போது, உலகத்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் அதிக ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஒரு நம்பர் 1 பவுலர் குட்லெந்த் பந்துகளை அதிகம் வீசியிருந்தால் நிச்சயம் டெய்ல் எண்டர்ஸ்களை விரைவாக வீழ்த்தியிருக்க முடியும்.

நம்பர் 1, நம்பர் 2 பேட்டர்கள் சோபிக்கவில்லை!

நம்பர் 1 மற்றும் நம்பர் 2 டெஸ்ட் பேட்டர்களாக இருந்துவரும் லபுசனே மற்றும் ஸ்மித் இருவரும் நிலைத்து நின்று விளையாடாதது பெரிய பாதகமாகவே அமைந்தது. ஆஸ்திரேலிய அணி கடந்த 15 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியை சந்தித்திருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணமாக இருந்துவருவது இந்த இரண்டு வீரர்கள் தான். மாறி மாறி இருவரும் சதங்களை பதிவு செய்துள்ளனர். ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் டெஸ்ட் போட்டியில் 251 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்துள்ளது மட்டுமில்லாமல், ஒரே இன்னிங்ஸில் 2 பேரும் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளனர்.

இரண்டு போட்டியிலும் இருவருக்கும் நல்ல தொடக்கம் அமைந்தது. ஆனால் தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத இருவரும் சோபிக்க தவறிவிட்டனர். லபுசனே 50+ பந்துகளை சந்தித்து 30+ ரன்களை எடுத்திருந்த போதிலும், அதை அரைசதமாகவோ, சதமாகவோ கன்வர்ட் செய்ய தவறிவிட்டார். இந்திய அணி தரப்பிலும் அனைவரும் சிறப்பாக விளையாடவில்லை, மாறாக ஒரு போட்டியில் 2 பேர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால் ஆஸ்திரேலிய தரப்பில் அந்த 2 பேர் சிறப்பாக விளையாடாமல் போனது தான் பெரிய பாதகமாக அமைந்தது.

பேட்டிங்கில் அட்டாக்கிங் அணுகுமுறை! பீல்ட் செட்டிங்கில் அட்டாக்கிங் அணுகுமுறை இல்லை!

ஆஸ்திரேலியாவின் வீரர்கள் விக்கெட்டுகளை கிஃப் செய்தது போலவே இருந்தது. எந்த வீரரும் விக்கெட்டை காப்பாற்றும் விதத்தில் செயல்படவில்லை. இறங்கிய 2ஆவது பந்திலேயே அடுத்து ஆடும் முயற்சி என்பது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பாதகத்தையே ஏற்படுத்தும். மேலும் களத்தில் நிலைத்து நின்று விளையாடிய வீரர்கள் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து அவுட்டாவது என்பது, டெஸ்ட் போட்டிகளில் அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்று. அதை ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக செய்து காட்டினர். இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் 40 விக்கெட்டுகளில் அடித்து ஆடமுயன்று இழந்த விக்கெட்டுகள் 20+ஆக இருந்தது தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்தது.

பேட்டிங்கில் அட்டாக் செய்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சில் போதிய அட்டாக்கிங்க் பீல் செட்டை பண்ணாமல் சொதப்பியது. விக்கெட் விழும் நேரங்களில் களத்தில் இருக்கும் வீரருக்கு அழுத்தம் தரும்விதமான பீல்ட் செட்டையே நிறுத்தவேண்டும். போட்டியின் சாதகமான சூழலில் இதனை ஆஸ்திரேலிய அணி செய்யத்தவறியதும் பாதகமாகவே அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com