இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளங்களா? தொடரும் விமர்சனம்; 4வது டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?

இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளங்களா? தொடரும் விமர்சனம்; 4வது டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?
இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளங்களா? தொடரும் விமர்சனம்; 4வது டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி மைதானங்கள் விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில், நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்த வகையில் ஆடுகளம் அமைக்கும் என்பதை காண மிகவும் ஆவலுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் தொடங்கி நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்தது. இது, கடுமையான விமர்சனத்தை எழுப்பியிருந்தது. இந்த நிலையில், நாளை அகமதாபாத்தில் கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த 3 போட்டிகளும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டிலும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டதும், 3 நாட்களிலேயே போட்டியில் முடிவு கிடைத்ததும் விமர்சனங்களை கிளப்பின. இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று போட்டி நடுவர் கிறிஸ் பிராட் முத்திரை குத்தியதுடன் 3 தகுதி இழப்பு புள்ளியும் விதித்தார். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் கடைசி டெஸ்ட் போட்டிக்கு தாங்கள் நினைத்தபடி ஆடுகளத்தை அமைத்திருக்கலாம். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பயிற்சி செய்யும் வகையில் அந்நாட்டு ஆடுகளத்தைப் போன்றே இந்தியா தயார்படுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது தொடரை வெல்ல வேண்டிய நிலையில், இந்திய அணி இருப்பதால், அப்படி ஒரு ஆடுகளத்தை அமைக்க நினைக்காது.

இதுபோன்ற ஒரு நிலையை ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் செய்திருந்தால் அது இந்திய அணி வீரர்களுக்கு அவர்கள் மீது சந்தேகத்தைக் கொடுத்திருக்கும். ஆடுகளப் பராமரிப்பாளர்கள் எப்படி தயார் செய்வார்கள் நாம் எப்படி தயார் ஆக வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டிருக்கும். இது இந்தியாவில் முதல்முறையாக நடக்கவில்லை. எப்போதெல்லாம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து திரும்பும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதோ, அப்போதெல்லாம் அது இந்தியாவையே பாதிப்படைய செய்திருக்கிறது.

எனவே கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்த வகையில் ஆடுகளம் அமைக்கும் என்பதை காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கடைசி டெஸ்டில் ஜெயித்தால்தான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். எனக்கு தெரிந்து அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து இப்போது யோசிக்க கூடாது. அவருடைய கவனம் எல்லாம் அடுத்த ஐந்து நாட்கள் குறித்துதான் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக மைதான பராமரிப்பு குறித்து பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ”சில நேரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்காக இது போன்ற முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளங்களில் விளையாட வேண்டி உள்ளது. பெரும்பாலான நாடுகள் இதைத்தான் விரும்புகின்றன. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆடுவது சவாலாக உள்ளதை பார்க்க முடிகிறது. நாங்களும் வெளிநாட்டில் ஆடிய போது சில சவால்மிக்க ஆடுகளங்களில் விளையாடி இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

- - ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com