இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே?

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே?

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே?
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனேவுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோருக்கான ஒப்பந்தம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இவர்களுக்கான பதவி காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்த இந்திய கிரிக்கெட் வாரியம், விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதற்கான கடைசி தேதி வரும் 30 ஆம் தேதி.

பயிற்சியாளருக்கான தகுதியாக, 60 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும் 2 ஆண்டு சர்வதேச அனுபவம் தேவை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. 

இந்நிலையில், டாம் மூடி, ஜெயவர்த்தனே, ஸ்டீபன் பிளமிங், கேரி கிறிஸ்டன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இவர்களில் ஜெயவர்த்தனே அல்லது டாம் மூடிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று செய்தி வெளி யாகியுள்ளது.

டாம் மூடி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு பயிற்சி யாளராக இருக்கிறார். இந்திய வீரர்களை பற்றி நன்றாக அறிந்தவர். இதற்கு முன் இரண்டு முறை, இந்திய தலைமை பயிற்சி யாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஜெயவர்த்தனே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன். தற்போது மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர். இவருக்கும் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கும் நல்ல தொடர்பு உள்ளதால் இவருக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டீபன் பிளம்மிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன். ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.

கேரி கிறிஸ்டன், தென்னாப்பிரிக்க அணி வீரர். ஏற்கனவே அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோதுதான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பாரா தெரியவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com