"மைதானத்தை மாற்றுவது, அபத்தம்! போட்டியில் வெல்ல தேர்வையே தவிர்ப்பதா?"- ஆஸி. முன்னாள் வீரர்

"மைதானத்தை மாற்றுவது, அபத்தம்! போட்டியில் வெல்ல தேர்வையே தவிர்ப்பதா?"- ஆஸி. முன்னாள் வீரர்
"மைதானத்தை மாற்றுவது, அபத்தம்! போட்டியில் வெல்ல தேர்வையே தவிர்ப்பதா?"- ஆஸி. முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து, இந்திய அணியின் மேனேஜ்மண்ட்டையும், வீரர்களையும் சாடியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான இயான் சேப்பல்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பங்குபெற்று விளையாடும் பார்டர் கவாஸ்கர் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றபெற்ற இந்திய அணி, 3ஆவது போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-1 என மாற்றி உள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றால் தொடரை சமன் செய்துவிடும் ஆஸ்திரேலிய அணி. அப்படி ஆஸ்திரேலிய அணி கடைசி போட்டியை வென்றுவிட்டால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பில் முன்னேறுவது, இலங்கை அணியின் கையில் சென்றுவிடும். அப்படியொரு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது இந்திய அணி.

இந்தியா மிகவும் மலிவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது- இயன் சேப்பல்

இந்நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை மிகவும் மோசமான முறையில் விட்டுக்கொடுத்ததாக விமர்சித்தார். போட்டி குறித்து பேசியிருக்கும் அவர், “இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமான முறையில் விக்கெட்டுகளை தவறவிட்டது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை சுலபமாக ஆல் அவுட் செய்ததுதான் போட்டியில் ஆஸ்திரேலியாவை முன்னோக்கி செல்ல வைத்தது.

இந்தியா போன்ற அணியை, மிகவும் குறைவான ரன்களில் முதல் இன்னிங்ஸில் அவுட்டாக்குவது என்பது உங்களுக்கு போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அந்தளவு குறைவான ரன்கள், உங்களை அதிக ரன்களை லீடில் போடுவதற்கு பெரிதும் உதவும். இந்திய அணி மிகவும் மலிவான முறையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது மட்டும் தான் போட்டியின் திருப்பு முனையாக இருந்தது” என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவிற்கே சென்று 2 டெஸ்ட் தொடர்களை வென்றதை இந்தியா மறந்துவிட்டதா?

போட்டியின் மைதானம் குறித்த சர்ச்சைகள் குறித்து பேசிய அவர், “இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று 2 முறை வென்றதை நினைவில் கொள்ள வேண்டும். மைதானத்தை நீங்கள் உங்களுக்கு தகுந்த மாதிரியாக மாற்றுவது என்பது மோசமான செயல்” என விமர்சித்தார்.

மைதானத்தின் சர்ச்சை குறித்து பேசியிருக்கும் சேப்பல், "மைதானத்தை மாற்றுவது என்பது அபத்தமானது. இது நாம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால், தேர்வையே சந்திக்க கூடாது என்பது போலான முட்டாள்தனமான ஒன்றாகும். ஆஸ்திரேலியர்கள் அவர்கள் வழிகளில் கடந்த போட்டிகளில் செய்த பிழையைக் கண்டுபிடித்து விளையாடி இருக்கிறார்கள். இந்தியாவும் அவர்களின் வழிகளில் பிழையை கண்டறிந்து செயல்பட வேண்டும். கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களையும் வென்றுவந்ததை இந்தியா மறந்துவிட்டதா? எதற்காக ஆடுகளத்தை மாற்ற வேண்டும்" சேப்பல் இந்திய மேனேஜ்மண்ட்டையும், வீரர்களையும் சாடி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com