”300 விக். + 6000 ரன்கள்!”.. - புதிய மைல்கல்லை தொட்டார் ஷகிப் அல் ஹசன்! சாதனைகள் இதோ!

”300 விக். + 6000 ரன்கள்!”.. - புதிய மைல்கல்லை தொட்டார் ஷகிப் அல் ஹசன்! சாதனைகள் இதோ!
”300 விக். + 6000 ரன்கள்!”.. - புதிய மைல்கல்லை தொட்டார் ஷகிப் அல் ஹசன்! சாதனைகள் இதோ!

300 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார், வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன்.

ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது ஆல்ரவுண்டராக, சனத் ஜெயசூர்யா மற்றும் ஷாஹித் அப்ரிடியுடன் இணைந்து சாதனை மேல் சாதனை புரிந்துள்ளார் ஷகிப்.

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, வங்கதேச அணியை ஒயிட்வாஸ் செய்யும் முயற்சியில் களமிறங்கியது. இந்நிலையில், முதலில் பேட் செய்த வங்கதேச அணியின் 247 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, ஷாகிப் அல் ஹசனின் சுழலை சமாளிக்க முடியாமல் 197 ரன்களில் ஆல் அவுட்டானது. 50 ரன்களில் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற ஷகிப், 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனை படைத்த ஷகிப்!

சட்டோகிராமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரெஹான் அகமதுவின் விக்கெட்டை கைப்பற்றிய போது, ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெற்றார்.

உலக வரலாற்றில் இதுவரை 13 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருக்கும் நிலையில், முரளிதரன், வாசிம் அக்ரம், கமிண்டா வாஸ், அனில் கும்ப்ளே, மெக்ராத், பிரட் லீ, லசித் மலிங்கா வரிசையில் 14ஆவது வீரராக இந்த இமாலய சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஷகிப் அல் ஹசன்.

300 விக்கெட்டுகள் + 6000 ரன்கள் அடித்த 3ஆவது ஆல்ரவுண்டர் என்ற சாதனை!

சனத் ஜெயசூர்யா மற்றும் ஷாகித் அப்ரிடிக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களுக்கு மேல் எடுத்த மற்றும் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது ஆல்ரவுண்டராக இணைந்துள்ளார் ஷகிப்.

3ஆவது இடதுகை பவுலராக சாதனை!

டேனியல் வெட்டோரி மற்றும் ஜெயசூர்யாவுக்குப் பிறகு 300 விக்கெட்டுகள் என்ற இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷகிப் அல் ஹசன்.

சமகால கிரிக்கெட்டர்களில் 6 வருடங்களில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர்!

சமகால கிரிக்கெட்டர்களில் கடந்த 6 வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டும் முதல் வீரராக ஷாகிப் அல் ஹசன் இந்த சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க் மட்டும் தான் 227 விக்கெட்டுகளுடன் இவருக்கு பிந்தைய, தற்கால கிரிக்கெட்டராக இருந்து வருகிறார்.

ஷாகிப்பின் மற்ற சாதனைகள்!

ஷாகிப் அல் ஹசன், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 231 மற்றும் 128 விக்கெட்டுகளுடன், பங்களாதேஷ் அணியின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்துவருகிறார். தற்போது டி20 வடிவங்களில் மொத்தமாக 443 விக்கெட்டுகளுடன், 6000 ரன்கள் எடுத்தவர் மற்றும் 50 கேட்சுகளை எடுத்த இரண்டு வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com