ஆஸி., முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தைப் பிடிக்க 3 வீரர்கள் இடையே கடும் போட்டி!

ஆஸி., முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தைப் பிடிக்க 3 வீரர்கள் இடையே கடும் போட்டி!
ஆஸி., முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தைப் பிடிக்க 3 வீரர்கள் இடையே கடும் போட்டி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விலகியுள்ள ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தைப் பிடிக்க 3 வீரர்கள் இடையே போட்டி நிலவுகிறது.

நியூசிலாந்து தொடரை முடித்த கையுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ம் தேதியன்று நாக்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகின்றது. இச்சூழலில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாதது பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் விலகியிருப்பது இந்திய அணிக்கு அடிமேல் அடியாக உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் ஒரு வீரர் வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு பெரும் சறுக்கலாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்று பார்க்கலாம்.

சுப்மன் கில்

சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடக்கூடியவர். ஆனால் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் இடத்தில் கே.எல்.ராகுலுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை என்பதால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் மிடில்-ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விராட் கோலியை போல் சுப்மன் கில் நடுவரிசையில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம். 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) அவர் சதம் அடித்து உள்ளார். இந்த பேட்டிங் அனுபவம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கைக்கொடுக்கலாம்.

சூரியகுமார் யாதவ்

இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் சூரியகுமார் யாதவ் இந்த டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் மிடில் ஆர்டரில் ஒரு அதிரடி வீரர் வேண்டும் என சூர்யகுமார் யாதவை தேர்வுக்குழு சேர்த்துள்ளது. இதுவரை 79 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 5,549 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 14 சதமும் 28 அரை சதமும் அடங்கும்.

நடப்பு சீசனில் கூட சூரியகுமார் யாதவ் 2 ரஞ்சி போட்டிகள் விளையாடி 223 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் ‘கிங்'ஆக வலம் வரும் சூர்யகுமார், டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால்  ஆஸ்திரேலியாவின் லியானின் ‘சுழலை’ துணிச்சலாக எதிர்கொள்ளலாம்

இஷான் கிஷன்

டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் கே.எஸ்.பாரத் முதல் தேர்வாக இருப்பார் என்பதால் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ள இஷான் கிஷன் பெஞ்சில் அமர வைக்கப்படலாம். இருப்பினும் அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் குறைவாக இருப்பதால் இஷான் கிஷனுக்கான கதவு திறக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com