இரட்டை சதம் விளாசிய பவன் ஷா - 613 ரன் குவித்த இந்திய இளம் அணி
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய இளம் அணி முதல் இன்னிங்சில் 589 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை இளம் அணி இரண்டு இன்னிங்சிலும் 244, 324 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில், இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாளில் இந்திய இளம் அணி 4 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்திருந்தது. டைய்டு 172 பந்துகளில் 177 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு பேட்ஸ்மேன் பவன் ஷா 177 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், இந்திய இளம் அணி இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடிய ஷா இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 282 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர், ஜுவல் 41, வதேரா 64, அர்ஜுன் டெண்டுல்கர் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய இளம் அணி 8 விக்கெட்டுக்கு 613 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பின்னர், விளையாடிய இலங்கை இளம் அணி 34 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யபந்தரா 51, தினுஷா 24 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய இளம் அணியில் ஜங்கரா 3 விக்கெட் சாய்த்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பவன் ஷா அடித்த 282 ரன் தான் இரண்டாவது அதிகபட்சமாகும். ஆஸ்திரேலியாவின் கிளிண்டன் பீக்கே 304* ரன் தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.