எத்தனையோ அவமானங்கள்: இருள் கொண்ட வானில் தீப ஒளி அல்லவா செரீனா? டென்னிஸ் மகாராணியின் கதை

எத்தனையோ அவமானங்கள்: இருள் கொண்ட வானில் தீப ஒளி அல்லவா செரீனா? டென்னிஸ் மகாராணியின் கதை
எத்தனையோ அவமானங்கள்: இருள் கொண்ட வானில் தீப ஒளி அல்லவா செரீனா? டென்னிஸ் மகாராணியின் கதை

24 வருட பயணத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மலைக்க வைத்து டென்னிஸ் உலகின் மகாராணியாக வலம் வந்த செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க ஓபன் மூன்றாவது சுற்றுப் போட்டியில் பெற்ற தோல்வியுடன் ஒற்றையர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா வில்லியம்ஸ், மகளிர் டென்னிஸில் அடுத்தடுத்து கோப்பைகளை வென்று உலகையை வியக்க வைத்தவர்கள். வீனஸ் வில்லியம்ஸ் ஒற்றையர் டென்னிஸில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற நிலையில், இளைய சகோதரி செரீனா வில்லியம்ஸ் அசராமல் சுழன்றடித்து தொடர்ந்து கோப்பைகளை குவித்து வந்தார்.

இன்று கடைசிப் போட்டியில் களம் கண்டார் செரீனா:

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ்தான் தனது ஒற்றையர் போட்டியின் கடைசியாக இருக்கும் என செரீனா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அய்ஜ்லா டாம்ஜனோவிக் உடன் மூன்றாம் சுற்றில் செரீனா மோதினார். மூன்று செட்கள் வரை சென்ற போட்டியில் 7-5, 6-7, 6-1 என்ற கணக்கில் செரீனா தோல்வியடைந்தார்.

ஓய்வு பெற்றார் டென்னிஸ் மகாராணி செரீனா:

இதையடுத்து, உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வழிய ரசிகர்களை நோக்கி நன்றி தெரிவித்த செரீனா, அவர்கள் மீதான அன்பை இதய வடிவில் கைகூப்பி வெளிக்காட்டினார். டென்னிஸின் அதிகபட்ச மதிப்புக்குரிய போட்டியான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 23 முறை சாம்பியன் பட்டம் வென்ற செரீனா, தனது சொந்த நாட்டில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாமில் தனது ஒற்றையர் டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

சரி., யார் இந்த செரீனா..?

செரீனா வில்லியம்ஸ் செப்டம்பர் 26, 1981 இல் நிறவெறியில் இன்றளவும் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் கருப்பின குடும்பத்தில் பிறந்தார். பதின்பருவத்திலேயே டென்னிஸ் பக்கம் செரீனா ஆர்வம் திரும்ப, பெற்றோரின் ஆதரவுடன் 1995 ஆம் ஆண்டு களத்திற்குள் அடியெடுத்து வைத்தார். வெறும் ஏழே வருடங்களில் அதாவது 2002 ஆம் ஆண்டு உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை என்ற மகுடத்தை தலையில் ஏந்தினார் செரீனா. ஒரு கிரான்ட்ஸ்லாம் பட்டமாவது வெல்வதே ஒரு டென்னிஸ் வீரரின் வாழ்நாள் இலக்காக இருக்கும். ஆனால் செரீனாவுக்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வெல்வது எல்லாம் வெகு இயல்பான ஒன்றாக மாறியது.

கிராண்ட்ஸ்லாம் நாயகியாக உருவெடுத்த செரீனா:

1999 ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று உலக டென்னிஸ் ரசிகர்களின் பார்வையை தன்பக்கம் திருப்பினார் செரீனா. அப்போது ரசிகர்களுக்கோ அல்லது செரீனாவுக்கோ தெரிந்திருக்காது. அடுத்த கால் நூற்றாண்டுக்கு செரீனாவிடம் இருந்து டென்னிஸ் உலகம் தன் பார்வையை திருப்ப முடியாது என்று! ஆம்.,, அதைத் தான் நிகழ்த்திக் காட்டினார் செரீனா. ஒன்றல்ல.! இரண்டல்ல! 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று “வேறு என்ன பாக்கி இருக்கு?” என்று டென்னிஸ் உலகை நோக்கி கேட்கும் அளவுக்கு வெற்றிகள் அவர் வசம் சென்று சேர்ந்திருந்தன.

6 அமெரிக்க ஓபன், 7 ஆஸ்திரேலிய ஓபன், 7 விம்பிள்டன் ஓபன், 3 பிரெஞ்சு ஓபன்! அத்தனையும் செரினாவுக்கே! அவ்வளவுதானா என்று கேட்டால் இல்லை! இவை அனைத்தும் ஒற்றையர் பிரிவில் செரீனா வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்! மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

2 அமெரிக்க ஓபன், 4 ஆஸ்திரேலிய ஓபன், 6 விம்பிள்டன் ஓபன், 2 பிரெஞ்சு ஓபன் ஆகியவை தான் செரீனா வென்ற மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்! இவைத்தவிர கலப்பு இரட்டையர் பிரிவிலும் செரீனா 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மலைக்க வைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக செரீனாவின் கரங்களை அலங்கரித்த கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 39!

ஒலிம்பிக்கையும் விட்டுவைக்காத செரீனா:

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வேட்டையாடிய செரீனா ஒலிம்பிக் பதக்கங்களையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் நடித்தால் ஹீரோதான் என்பது போல வென்றால் தங்கப்பதக்கம் மட்டும்தான் என்பதை வைராக்கியமாக செரீனா வைத்திருந்தாரோ என்னவோ! ஒலிம்பிக்கில் அவர் வென்ற 4 பதக்கங்களும் தங்கப்பதக்கம்தான்! இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள செரீனா, ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இவ்வளவுக்கு பின்னால் இருக்கும் வலி, வேதனை பற்றித் தெரியுமா?

விளையாட்டு வீரர்கள் களத்தில் சிலசமயம் உணர்ச்சிவசப்பட்டு சில அசாதாரண செயல்களை செய்யும்போது அவை பத்திரிகைகளால் விமர்சிக்கப்படுவது வழக்கம். ஆனால் இது செரீனா என்று வரும்போது நிறவெறியும் சேர்ந்து அந்த விமர்சனத்தில் உமிழப்படுவதாக குற்றச்சாட்டு எழுவதுண்டு.

ஆஸ்திரேலிய செய்தித்தாள் (மெல்பெர்ன் ஹெரால்டு சன்) ஒன்று செரினா வில்லியம்ஸ் குறித்து வெளியிட்ட கார்ட்டூன் சர்ச்சைப் புயலைக் கிளப்பியதை மறக்க முடியுமா? அந்த கார்ட்டூன் நிறவெறி மற்றும் பாலியல் சீண்டலை குறிப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த கார்ட்டூனில் பெரிய உதடுகளுடன் கோபத்தை வெளிப்படுத்தும் செரீனாவின் முகம் வரையப்பட்டிருக்கும். அமெரிக்க ஓப்பனில் நவாமி ஒசகாவுக்கு எதிராக தோல்வியை தழுவியவுடன் அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷ நடவடிக்கை இவ்வளவு மோசமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இருள் கொண்ட வானில் தீப ஒளி அல்லவா செரீனா?

இந்த விமர்சனங்களையெல்லாம் அடுத்தடுத்த வெற்றியின் மூலம் தவிடுபொடியாக்கினார் செரீனா. கருவுற்றிருக்கும்போதும் களத்தில் விளையாடுவதை செரீனா நிறுத்தவில்லை. மன அழுத்தம் காரணமாக ஆஷ்லே பார்ட்டி இளவயதிலேயே ஓய்வு பெற்றதற்கும், இன்று செரீனா ஓய்வு பெற்றிருப்பதற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால் செரீனாவுக்கு நன்றாக தெரியும். அங்கு செரீனா என்பது ஒற்றை ஆள் இல்லை என்று. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனத்தின் இருளகற்றும் தீப ஒளி என்று. அந்த ஒளி இன்று தன் பிரகாசத்தை நிறுத்தியிருக்கிறதா? இல்லை., இன்னும் பலர் அந்த இடத்தை அடைய வழிகாட்டும் கலங்கரை விளக்காக வாழ்நாளெல்லாம் செரீனா ஒளிர்ந்து கொண்டே இருப்பார்.

கொஞ்சம் ஓய்வெடுங்கள் செரீனா! சுழன்றடிக்கும் அந்த கால்களும் கைகளும் இளைப்பாறட்டும்!

“நான் அழுவதில்லை. அப்படி இருப்பது கொஞ்சம் கடினம்தான். என் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறேன். அப்படி ஒரு போராட்டத்தின் மூலமே எப்படி வெற்றி பெறுவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இனி நான் புன்னகைத்துக்கொண்டே இருப்பேன்” - செரீனா வில்லியம்ஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com