நடால் வரிசையில் அசத்தும் 20 வயது ஸ்பெய்ன் வீரர் அல்கரஸ்! முதல் விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை!

புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரை 20 வயதில் வென்று சாதித்திருக்கிறார் ஸ்பெய்னின் நம்பிக்கை நட்சத்திரம் கார்லோஸ் அல்கரஸ்.
Alcaraz
AlcarazTwitter

முதல் விம்பிள்டனை ஜாம்பியனை வீழ்த்தி வென்ற அல்கரஸ்!

டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர்களுள் ஒன்றான விம்பிள்டன் நேற்று நடந்து முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்கரஸ் கார்ஃபியா, இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஜோகோவிச் இந்தப் போட்டியை வென்றால், அதிக விம்பிள்டன் பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் ஃபெடரருடன் முதல் இடத்தில் சமன் செய்திருப்பார். ஆனால் அல்கரஸ் அதற்கு விடவில்லை. தன் திறமையை மிகப் பெரிய அரங்கில் வெளிக்காட்டினார்.

Alcaraz
Alcaraz

முதல் செட்டில் பெரிய ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், அதை 6-1 என வென்றார். அதனால், அவர் மிகவும் எளிதாக வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக வெகுண்டெழுந்தார் அந்த இளம் ஸ்பெய்ன் வீரர். இரண்டாவது செட்டில் ஜோகோவிச்சுக்கு பெரும் சவாலாக விளங்கிய அவர், டை பிரேக்கர் வரை போராடினார். டை பிரேக்கை 8-6 என்று வென்ற அல்கரஸ், மூன்றாவது செட்டை 6-1 என அட்டகாசமாக வென்றார். ஆனால் ஜோகோவிச் விடுவதாக இல்லை. 6-3 என நான்காவது செட்டை வென்று, ஆட்டத்தை ஐந்தாவது செட்டுக்கு எடுத்துச் சென்றார். பட்டம் யாருக்கு என்ற கடைசி மற்றும் ஐந்தாவது செட்டில் ஜோகோவிச்சின் இரண்டாவது சர்வீஸை முறியடித்த அல்கரஸ், 6-4 என வென்று விம்பிள்டன் சாம்பியனாக மாறினார்.

நடால், ஜோகோவிச் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி கவனம் பெற்றார்!

இது அல்கரஸ் வெல்லும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் தொடர். இதற்கு முன் 2022 அமெரிக்க ஓப்பன் பட்டத்தை வென்றிருந்தார் அவர். 20 வயதே ஆன அல்கரஸ், 2021ம் ஆண்டு ரோம் மாஸ்டர்ஸ் தொடரில் ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு ATP தொடர்களில் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார். ஸ்பெய்னைச் சேர்ந்தவர் என்பதால், டென்னிஸ் ரசிகர்கள் பலரும் இவரை நடாலோடு ஒப்பிட்டுப் பேசத் தொடங்கினார்கள். அவரைப் போலவே கடைசி வரை கடுமையாகப் போராடக் கூடியவரான அல்கரஸ், அதை விம்பிள்டன் அரங்கிலும் அரங்கேற்றினார்.

சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக சர்வீஸ் செய்தபோது அவர் பின்தங்கவேயில்லை. யோசிக்காமல் டிராப் ஷாட்கள் முயற்சி செய்தார். அதிலும் ஒரு கட்டத்தில் ஒரு டிராப் செய்துவிட்டு, உடனே அசால்டாக ஒரு 'லாப்' ஷாட் ஆடினார். அதுவும் ஜோகோவிச்சுக்கு எதிராக அதை செய்தது, இப்போதுவரை ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பிலேயே வைத்திருக்கிறது.

போட்டிக்கு பின் அல்கரஸை பாராட்டிய ஜோகோவிச்!

சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தப் போட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தது. போட்டிக்குப் பிறகான இருவரின் பேச்சும் கூட சிறப்பாக ரசிக்கும்படியாக இருந்தது. இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், அல்கரஸை வெகுவாகப் பாராட்டினார் ஜோகோவிச். "நான் இதுபோன்று வெற்றி பெறவேண்டிய போட்டியில் தோற்றிருப்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், தோற்க வேண்டிய பல பைனல்களில் நான் வென்றிருக்கிறேன். அதனால் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதேசமயம் கார்லோஸ் மிகவும் சிறப்பாக விளையாடினார். மிகவும் திறமையான வீரர். அவருக்கும் அவர் அணிக்கும் என்னுடைய வாழ்த்துகள். களிமண் தரையிலும், ஹார்ட் கோர்ட்களிலும் தான் கார்லோஸ் எனக்கு சவாலாக இருப்பார் என்று நினைத்தேன். புல்தரையில் பெரிதாக சவால் இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று அது தவறாகிவிட்டது" என்று கூறியபோது மொத்த அரங்கமும் சிரித்தது.

அதுவரை மிகவும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த ஜோகோவிச் தன் குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது சற்று எமோஷனலாகினார். தந்தை தோற்றிருந்தாலும் ஜோகோவிச்சின் மகன் அவரைப் பார்த்துப் புன்னகைத்த தருணம், அவ்வளவு நெகிழ்வாக இருந்தது. அப்போதுதான் சிரித்துக்கொண்டிருந்த ஜோகோவிச்சின் கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தத் தொடங்கியது.

Djokovic
Djokovic

இதையடுத்துப் பேசிய அல்கரஸ், "விம்பிள்டன் வெல்லவேண்டும் என்பது எல்லோருடைய கனவாகவும் இருக்கும். அதை வென்றிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் குறைந்த அளவிலான புல்தரைப் போட்டிகள் மட்டுமே விளையாடியிருந்தபோதும் இதை வென்றிருப்பது அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறது. என் அணியின் கடுமையான முயற்சிக்கு கிடைத்திருக்கும் பலன் இது. நான் ஜோகோவிச்சின் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்தேன். நான் விளையாடத் தொடங்கியபோது அவர் பட்டங்கள் வெல்லத் தொடங்கியிருந்தார். அவருக்கு எதிராக வென்றிருப்பது பெருமையாக இருக்கிறது. இன்னும் தொடர்ந்து பல தொடர்களை வெல்ல முயற்சி செய்வேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com