டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸை தொடரிலிருந்தே வெளியேற்றிய அயர்லாந்து.!

டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸை தொடரிலிருந்தே வெளியேற்றிய அயர்லாந்து.!
டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸை தொடரிலிருந்தே வெளியேற்றிய அயர்லாந்து.!

இரண்டு முறை டி20 உலககோப்பையின் சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேற்றி உள்ளது அயர்லாந்து அணி.

டி20 உலககோப்பையின் உண்மையான போட்டிகள் சூப்பர் 12 சுற்று போட்டிகள் என்று நினைத்த எல்லோருடைய பார்வைக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளன சிறிய அணிகள். ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணி சிறிய அணி தானே என்று களமிறங்கியதின் விளைவாக தான் முதல் போட்டியிலேயே நமீபியா அணியுடன் படுதோல்வி அடைந்தது. பின்னர் அடுத்த 2 போட்டிகளில் சுதாரித்து விளையாடி சூப்பர் 12 சுற்றுக்குள் முன்னேறி உள்ளது. அதே போலவே முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் தோல்வி அடைந்த விண்டிஸ் அணியும் அடுத்த போட்டியில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்தது.

இந்நிலையில் இன்று அயர்லாந்துக்கு எதிரான போட்டியை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், காலை அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே போட்டி தொடங்கியது. டாஸ்ஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்வதாக தீர்மாணித்தது. பின்னர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு துவக்கத்திலேயே ஷாக் கொடுத்தனர் அயர்லாந்து பவுலர்கள். அணியின் ஸ்கோர் 10 ரன்கள் இருந்த நிலையில் ஓபனர் மேயர்ஸ் மூன்றாவது ஓவரிலேயே 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் மற்றொரு ஓவனர் சார்லஸ் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகள் சிக்சர்கள் என அடுத்து நம்பிக்கையளித்தார். ஆனால் 5ஆவது ஓவரை வீச வந்த சிமி சிங் சார்லஸ்ஸையும் வெளியேற்ற, 27 ரன்களில் 2 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய ப்ரண்டன் கிங் லெவிஸ் உடன் கைக்கோர்த்து பார்ட்னர்சிப் போட்டனர். நன்றாக சென்ற இந்த கூட்டணியை முறியடித்து 71 ரன்கள் இருந்த நிலையில் விக்கெட்டை வீழ்த்தினார் டெலானி. அடுத்தடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல் என 2 அதிரடி வீரர்களையும் வெளியேற்றிய டெலானி அதிரடி காட்டினார். பின்னர் களமிறங்கிய ஓடியன் ஸ்மித் மற்றும் ப்ராண்டன் கிங் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு போராடினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கோடு களமிறங்கிய அயர்லாந்து ஓபனர்கள் விண்டிஸ் பவுலர்களின் பந்தை நாலா பக்கமும் சிதறவிட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமாக பேட்டிங் ஆடிய ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிர்னே இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 73 ரன்கள் சேர்த்தனர். 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிய பால்பிர்னே 37 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் டக்கரும் அதிரடி காட்ட 1 விக்கெட்டை மட்டுமே விட்டுகொடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து அணி.

இறுதி வரை களத்தில் இருந்த ஸ்டிர்லிங் மற்றும் டக்கர் இருவரும் 66 ரன்கள் மற்றும் 45 ரன்களில் களத்தில் இருந்தனர். 2 முறை டி20 உலக சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டிஸ் அணி லீக் சுற்றோடு உலககோப்பையில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com