ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் - வெற்றியை ருசிக்குமா பெங்களூரு அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் டென்லி, சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டென்லி, டக் அவுட் ஆனார்.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து வென்றது. ஷிகர் தவான் 63 பந்துகளில் 97 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு பஞ்சாபில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இதுவரை ஒரு வெற்றியைக் கூட ருசிக்காத பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.