ஐபிஎல் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள்!
ஐபிஎல் கிரிகெட் போட்டியில் இதுவரை 11 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 27ம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இந்தப் போட்டிக்காக வீரர்கள் தயாராகி வருகின்றனர். ஐபிஎல் அணிகளில் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெளிநாடு மற்றும் உள்ளூர் அணி வீரர்களின் கலவையோடு ஒவ்வொரு அணியும் உள்ளது.
ஆனால், ஐபிஎல் போட்டிகளில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதில்லை. ஐபிஎல் தொடங்கிய காலத்தில் அதாவது 2008-ல், 11 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
பிறகு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதையோ, பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டியில் சேர்ப்பதையோ, இந்திய கிரிக்கெட் வாரியம் தடை செய்தது. இதனால் அடுத்து நடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடவில்லை. கடும் விமர்சனம் காரணமாக, இந்த தடை நீக்கப்பட்டு மூன்றாவது ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்துக்கு வந்தனர். ஆனால், எந்த ஒரு அணியும் அந்நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய அந்த 11 பாகிஸ்தான் வீரர்கள் இவர்கள்தான்!
சோயிப் அக்தர், உமர் குல், முகமது ஹபிஸ், சல்மான் பட்: இவர்கள் அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினர்.
சோயிப் மாலிக்- டெல்லி டேர்டெவில்ஸ்.
ஷாகித் அப்ரிடி- டெக்கான் சார்ஜர்ஸ் (இப்போது சன் ரைசர்ஸ்).
யூனிஸ் கான், சோஹைல் தன்வீர், கம்ரன் அக்மல் - ராஜஸ்தான் ராயல்ஸ்.
முகமது ஆசிப் - டெல்லி டேர்டெவில்ஸ்.
மிஷ்பா உல்- ஹக்- பெங்களூர்.
இவர்கள் தவிர, அஷார் முகமது பிரிட்டீஷ் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதை வைத்து விளையாடி வந்தார். பாகிஸ்தானின் ஏ அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றிருந்த இம்ரான் தாஹிர் இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். அவரும் இந்த தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.