இந்தியாவில் டி வில்லியர்ஸ் தன் மனைவியிடம் காதலை சொன்ன இடம்! : 10 அறிய தகவல்கள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான வில்லியர்ஸ், இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அளவிலான சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அனைத்து திசைகளிலும் பந்து சிதறிடிப்பார் என்பதால், மிஸ்டர் 360 டிகிரி என்ற பெயரும் இவருக்கும் உள்ளது.
ஏன்? சர்வதேச போட்டியில் இருந்து விலகுகிறேன் என விளக்கமளித்து டி வில்லியர்ஸ், “செல்வதற்கு இது சரியான நேரம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு நன்றி. இதற்கு மேலும் கிரிக்கெட் விளையாடும் எண்ணம் இல்லை. இதன்பிறகு நான் டூபிளசிஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த ஆதரவாளராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இவரது ஓய்வு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி வில்லியர்ஸ் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்:
- தற்போது தென்னாப்பிரிக்க அணியில் விளையாடி வரும் டூபிளசிஸ் மற்றும் டி வில்லியர்ஸும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அப்போது முதலே இவரும் சிறந்த நண்பர்கள்.
- டி வில்லியர்ஸ் நல்ல பாடகர். தென்னாப்பிரிக்காவில் ஒரு இசைக்குழுவையும் வைத்துள்ளார்.
- இவரது பிறந்த தினம் 17ஆம் தேதி பிப்ரவரி 1984ஆம் ஆண்டு. இவரது முதல் சர்வதேச போட்டியை விளையாடியது 17ஆம் தேதி டிசம்பர் 2004ஆம் ஆண்டு. எனவே 17 தனக்கு ராசியான எண் என்பதால், அவர் தனது கிரிக்கெட் உடையின் எண் 17 என தேர்வு செய்துள்ளார்.
- அவர் ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அவர் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
- இவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரர். அதை அவரே டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- இவர் ஐபிஎல் விளையாடுவதற்கு இந்தியா வந்தபோது, அவரது மனைவியிடம் தாஜ்மால் முன் தன் காதலைக் கூறியுள்ளார்.
- இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒருமுறை கூட அதில் பூஜ்ஜியம் ரன்னில் அவுட் ஆனதில்லை.
- இவருக்கு பிடித்த புத்தகம் பைபில். இதை அவரே தெரிவித்துள்ளார்.
- சர்வதேச ஒருநாள் போட்டியில் விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த வீரர் டி வில்லியர்ஸ்தான். ஆனால் இந்த மூன்றையுமே அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகதான் அடித்துள்ளார்.
- விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து, டெஸ்ட் போட்டியில் 10 பேரை ஆட்டமிழக்க செய்துவிட்டு, அதே போட்டியில் 100 ரன்கள் குவித்தவர் இவர்தான். இந்தச் சாதனையை 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் இவர் நிகழ்த்தியுள்ளார்.