“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்

“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்
“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்”  - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்

‘யோ யோ’ சோதனை மூலம் இந்திய வீரர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறீர்கள் என்று இந்திய அணி தேர்வுக் குழுவினர் முன்னாள் உறுப்பினர் சந்தீப் பாட்டீல் எச்சரித்துள்ளார்.

இந்திய அணியில் ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ யோ’ என்னும் உடற்தகுதி சோதனை வீரர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சோதனையில் தேர்வு பெற்றால் மட்டும்தான் வீரர்கள் விளையாட முடியும். ‘யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக 16.1 என மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் கொண்டு வந்த விஷயம் இது. 

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் விளையாட உள்ள வீரர்களுக்கன ‘யோ யோ’ சோதனை சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு ‘யோ யோ’ சோதனையில் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் சோதனையில் தோல்வி அடைந்தார். ஷிகர் தவான் ‘யோ யோ’ சோதனை நாளில் சொந்த காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை. பின்னர் அவருக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த யோ யோ சோதனை குறித்து பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். 

இந்நிலையில், யோ யோ சோதனை குறித்து சந்தீப் பாட்டீல் கூறுகையில், “உடற்தகுதி சோதனைகளுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், இந்திய அணியில் இடம்பிடித்த ஒரு வீரர் ‘யோ யோ’ சோதனையில் தோல்வி அடைவது என்பது நகைப்புக்குரியது. இதன்மூலம் இந்திய அணியின் நிலைத்தன்மையை நீங்கள் சீர்குலைக்கிறீர்கள். நீங்கள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறீர்கள். 

இருப்பதிலே டி20 தான் அதிக போட்டி நிறைந்தது. ஐபிஎல் தொடர் முழுவதும் வீரர்கள் எந்தப் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். நான் மிகவும் அபத்தமாகவும், தவறாகவும் பார்ப்பது எதனை என்றால், ஒரு பயிற்சியாளர் வீரர்களின் தேர்வை முடிவு செய்கிறார். பயிற்சியாளர் தேர்வாளராக ஆக முடியுமா?

தேர்வுக் குழுவுக்கு வெளியே இருப்பவர்களின் ஆதிக்கம் வீரர்களின் தேர்வில் இருக்கிறது. ஒரு தொடருக்காக வீரர்களை தேர்வு செய்வதற்கு முன்பாக தேர்வுக் குழுவிடம் எந்தெந்த வீரர்கள் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறித்த பட்டியல் கொடுக்கப்படும். அதன்படி தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்வு செய்வார்கள். 

எந்த வீரரும் 100 சதவீதம் உடற்தகுதி உடன் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு வீரருக்கும் இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்திய அணியில் மிகவும் தாமதமாக இடம்பிடித்த ஷமி போன்றவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். இது சரியானது அல்ல”  என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com