“யோகி தோனி.. யோகி விராட் கோலி..” - ஜெர்ஸியை கலாய்த்த ரசிகர்கள்
இந்திய அணியின் புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி புதிதாக ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து களமிறங்கவுள்ளது. இதனையடுத்து பிசிசிஐ நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அந்த ட்வீட்டில், “இந்திய அணியின் புதிய ஜெர்ஸி. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”எனப் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப் புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியை கலாய்த்து ரசிகர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவர், “இந்த ஜெர்ஸி இந்தியன் ஆயில் கார்பரேஷன் உடை போல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர் பிசிசிஐயிடம், “நீங்கள் இந்த ஜெர்ஸியில் வீரர்களின் பெயருக்கு முன்னாள் ‘யோகி’ என்பதையும் சேர்த்து அச்சிட உள்ளீர்களா? உதாரணமாக யோகி தோனி, யோகி கோலி, யோகி ரோகித் ... ” எனக் கேள்வி கேட்டுள்ளார்.
மேலும் மற்றொரு நபர் இந்த ஜெர்ஸியின் பின்னால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என அச்சிட்ட மாதிரி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல ஒரு தமிழ்நாட்டு ரசிகர், “இந்தப் புதிய ஜெர்ஸிக்கு முன்னுதாரணமாக இருந்த ஸ்விக்கிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.