“காலில் அடிபட்ட விஜய் சங்கர் ஏன் குளிர்பானம் கொடுக்க ஓடுகிறார்” - முரளி கார்த்திக்

“காலில் அடிபட்ட விஜய் சங்கர் ஏன் குளிர்பானம் கொடுக்க ஓடுகிறார்” - முரளி கார்த்திக்
“காலில் அடிபட்ட விஜய் சங்கர் ஏன் குளிர்பானம் கொடுக்க ஓடுகிறார்” - முரளி கார்த்திக்

விஜய் சங்கர் கால் விரலில் காயம் என போட்டியில் சேர்க்கப்படாத நிலையில் அவர் ஏன் டிரிங்க்ஸ் கொடுக்க ஓடுகிறார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் முதல் முறையாக உலகக் கோப்பையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அன்றைய தினம் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்த விஜய் சங்கர், 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதனால் அடுத்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் 41 பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் 29 ரன்களை எடுத்தார். ஆனால் அன்றைய தினம் அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த அவர், 14 (19) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அன்றும் அவருக்கு பவுலிங் வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் விஜய் சங்கர் சேர்க்கப்படவில்லை. அவரது கால் விரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், “விஜய் சங்கர் கால் விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் போட்டியில் விளையாட முடியவில்லை. பின்னர் ஏன் அவர் கூல் டிரிங்க்ஸ் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்த வேலையை செய்வதற்கு வேறு யாரும் இல்லையா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கருத்து ஒரு தமிழக வீரர் இந்திய அணியில் நிராகரிப்படுவதாகவும், காயம் ஏற்பட்டாலும் அவர்கள் உரிய வகையில் நடத்தப்படுவதில்லை என்பதைப் போலவும் அமைந்துள்ளது. முரளி கார்த்திக்-கும் தமிழக வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com