"விராட் கோலியை விமர்சித்தவர்கள் இப்போது எங்கே?"- முன்னாள் RCB வீரரின் சரமாரி கேள்வி!

"விராட் கோலியை விமர்சித்தவர்கள் இப்போது எங்கே?"- முன்னாள் RCB வீரரின் சரமாரி கேள்வி!
"விராட் கோலியை விமர்சித்தவர்கள் இப்போது எங்கே?"- முன்னாள் RCB வீரரின் சரமாரி கேள்வி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீது விமர்சனம் வைத்தவர்கள் தற்போது எங்கே போனார்கள் என தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் தப்ராஸ் ஷம்ஸி கேள்வியெழுப்பியுள்ளார். 

கடந்த 2-3 ஆண்டுகளாக இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி சரியாக விளையாடவில்லை என அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டதுடன், கேப்டன் பதவிகளும் பறிக்கப்பட்டன. அவரை, அணியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார் விராட். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை முதல் தொடர்ந்து பேட்டிங்கில் அவர் அசத்தி வருகிறார். குறிப்பாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக்கோப்பையில் சதமடித்தார். தற்போது பேட்டிங்கில் அவரது வான வேடிக்கை தொடர்கிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் மற்றும் 3வது போட்டிகளில் சதம் அடித்து சரித்திர சாதனை படைத்தார். அதிலும் 3வது ஒருநாள் போட்டியின்போது அதிவேகமாய்ச் சதமடித்து அசத்திய விராட் கோலி, பல சாதனைகளையும் முறியடித்தார்.

தாம் பழைய நிலைமைக்குத் திரும்பியது குறித்து பேட்டியளித்த கோலி, "நான் நம்பிகையின்றி விளையாடும்போது சில விஷயங்கள் என்னை விட்டு விலகி நிற்கின்றன. என்ன நினைக்கிறேனோ, அதைத் தற்போது செய்ய விரும்புகிறேன். எதற்காகவும் நான் போராடவில்லை. நீண்டநாள் ஓய்வுக்குப் பிறகு நான் நன்றாக, நம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். குறிப்பிட்ட சாதனையை எட்டவேண்டும் என்கிற பதற்றம் என்னிடம் தற்போது இல்லை.

என்னுடைய பேட்டிங்கை ரசித்து விளையாட வேண்டும், அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். நான் விளையாடும் விதம் எனக்கு செளகரியமாக உள்ளது" எனத் தெரிவித்திருந்தார். விராட் கோலி, கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ஆசியக் கோப்பை தொடங்கும் வரை, கிட்டத்தட்ட 42 நாட்கள் நல்ல ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தப்ராஸ் ஷம்ஸி, கோலி ஆதரவு தெரிவித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை விராட் கோலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கு இருக்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம், விராட் கோலி மீது வைக்கப்பட்ட விமர்சனம் முடிவுக்கு வந்த நிலையில், அது தற்போது கேப்டன் ரோகித் சர்மா பக்கம் திரும்பியிருக்கிறது. அவர், சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com